Monday, May 24, 2010

சனத் எதிர்ப்பாளர்கள் ஒழிக.... :P

சனத் ஜெயசூரியா இப்போதெல்லாம் எதற்குமே பிரயோசனமில்லாமல் வெத்து வேட்டாக அணியிலிருப்பதால் பலருக்கு சனத் மீது எரிச்சல்.
சனத்தை வைத்து நகைச்சுவை மொக்கை போட முயற்சிக்கிறார்கள்....


இப்படித்தான் அண்மையில் சிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்ட போது தெரியாத்தனமாக சனத் இற்கு ஓய்வு (rested) என்று சொல்லிவிட்டார்கள்...
அதை வைத்து நான் உட்பட பலர் நக்கலடிக்கிறார்கள் சனத் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று ஓய்வு என்று.

ஆனால் நாங்கள் ஒரு மிகப்பெரும் உண்மையை மறந்திருக்கிறோம்.
அதற்கு முன்னர் சிறிய விளக்கமொன்றை சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நடந்து செல்கிறீர்கள். அங்கிருந்து உடனே திரும்பி உங்களால் நடந்து வந்தால் களைக்குமல்லவா?
ஆனால் அதுவே அங்கு கொஞ்சம் இளைப்பாறிவிட்டு திரும்பி நடந்து வந்தால் களைப்புத் தெரியாதல்லவா?
சரி,
அதையே இங்கு நோக்குங்கள்...
சனத் தலைக்கவசம், கால் கவசங்கள், அது இது எண்டு எல்லாத்தயும் குனிஞ்சு நிமிர்ந்து கட்டிக்கொண்டு 2,3 கிலோகிராம் நிறையுள்ள துடுப்பையும் (bat) எடுத்துக் கொண்டு மூச்சிரைக்க மூச்சிரைக்க நடந்து போய் அங்க guard எல்லாம் எடுத்திற்று காலில, தலைக்கவசத்தில அங்க இங்க எல்லாம் ஒரு தட்டு தட்டிற்று நிண்டு உடனயே ஆட்டமிழந்து திரும்பி வரும் போது எவ்வளவு களைப்பா இருக்கும் தெரியுமா?
ஆகவே இலங்கை அணியில் அதிகம் களைப்படைந்த வீரர் சனத் மட்டுமே.

என்னைப் பொறுத்தவரை இந்த ஓய்வு சனத்திற்கு நிச்சயமாகத் தேவைப்பட்ட ஒன்று. ;)
நன்றி ஸ்ரீலங்கா கிறிக்கற்.




சரி, இப்படியிருக்க முன்பு கிறிக்கற் வீரர்களை நோக்கி வெளியிடப்பட்ட நகைச்சுவைகள் சனத்திற்கு அழகாகப் பொருந்துவது போலுள்ளது.
சிலவற்றை சனத் என்று பெயர் மாற்றிப் பார்ப்போம்.

உங்களிடம் 5 டொலர்கள் உள்ளன, சனத் இடம் 5 டொலர்கள் உள்ளன என்றால் என்ன அர்த்தம்?
சனத்திடம் உங்களை விட அதிக பணம் உண்டு.
(அது அப்பிடித்தான்)


சனத் ஜெயசூரியா இரவு விளக்கை ஒளிர விட்டுக் கொண்டு தான் உறங்குவார்.
சனத் இற்கு இரவைக் கண்டால் பயம் என்று அர்த்தமல்ல,
இரவுக்கு சனத்தைக் கண்டால் பயம்.


KFC இல் இடியப்பத்திற்கு order கொடுத்து அதைப் பெற்றவர் சனத் ஜெயசூரியா.


ஐன்ஸ்ரினை விட சனத் ஜெயசூரியா எவ்வாறு அறிவுள்ளவர் என அறியலாம்?
தானாக முயலாமலே சனத் ஆல் ஆட்டமிழக்க முடியும்.


அடுத்த பந்தில் நிச்சயமாக ஒரு விக்கற் விழவேண்டும் என்றால் சனத் என்ன செய்ய வேண்டும்?
துடுப்பெடுத்தாட வேண்டும்.


சனத் ஜெயசூரியா ஒரு போட்டிக்கு முன்னர் கடுமையாக மதுபானம் அருந்திவிட்டு பயிற்றுவிப்பாளரிடம் போய்ச் சொன்னார் எல்லாமே எனக்கு மூன்று மூன்றாகத் தெரிகிறது, நான் என்ன செய்ய என்று.
பயிற்றுவிப்பாளர் 'ஒன்றும் யோசிக்க வேண்டாம். வரும் 3 பந்துகளில் நடுவில் வரும் பந்தை மட்டும் அடியுங்கள்' என்று சொல்லியனுப்பினார்.
ஆடுகளத்திற்கு தட்டுத்தடுமாறிச் சென்றார் சனத், பிறகு என்ன நடந்திருக்கும் என்று சொல்லியா தெரிய வேண்டும்.
ஆட்டமிழந்து வந்ததும் பயிற்றவிப்பாளர் கோபத்துடன் நடுப்பந்தை அடி என்றால் என்ன செய்தாய்? என்று கேட்க,
சனத் 'நான் நடுப்பந்தைத் தான் அடிக்க முயற்சித்தேன். ஆனால் கரையிலிருந்து துடுப்பால் அடிக்க முயற்சித்தேன், முடியவில்லை' என்றார்.


தொடர்ந்து போட்டிகளில் மோசமாக ஆடியதால் சனத் ஜெயசூரியா அணியை விட்டுத் தூக்கப்பட்டார்.
கடுமையாகப் பயிற்சி செய்து திரும்ப தேசிய அணிக்கான பயிற்சிக்கு வந்தார்.
வலைப்பயிற்சியில் ஆடிவிட்டு பெருமையுடன் பயிற்சியாளரிடம் வந்து
'ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?' என்றார்.
'தலைமுடி வெட்டியிருக்கிறீர்கள் தானே?' என்றார் பயிற்றுநர் அப்பாவித்தனமாக.


சனத் ஜெயசூரியாவை ஆட்டமிழந்து வாருங்கள் என்று எப்படி அமைதியாகச் சொல்வது?
'போய்த் துடுப்பெடுத்தாடுங்கள்' என்று சொல்வதன் மூலம்.

சனத் மத்தியவரிசைக்குத் துடுப்பெடுத்தாட மாற்றப்பட்ட பின் ஒரு போட்டியில் சங்கக்கார முதற்பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்...
வெளியேறும் போது அடுத்ததாக துடுப்பெடுத்தாட ஆடுகளத்தை நோக்கி சனத் விரைந்து கொண்டிருந்தார்.
போகும் போது கவலையுடனிருந்த சங்கக்காரவை 'கவலை தான். hard luck man' என்றார்.
சங்கா உடனே, 'ஆமாம். ஒரு ஹட் ட்ரிக் இல் நடுவில் (2ஆவது விக்கற்றாக) ஆட்டமிழந்தவனாக இருக்கப் போகிறேன் என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது' என்றார்.


எண்கோலத்தில்  தொடர்ந்து வரும் எண்ணைக் கண்டுபிடிக்குக...
0, 3, 6, 5, 0, 1....
அடுத்த எண்களைக் கண்டுபிடிக்குக....
ஒன்றுக்கு (1 இற்கு) அடுத்தது DNB என்று வரும். மிகுதியை சனத் மட்டுமே அறிவார், ஏனென்றால் இவை சனத் இன் அண்மைக்கால ஓட்டங்கள்...




(நன்றி பவன், புகைப்படத்தில் உதவி செய்தமைக்கு)

Friday, May 21, 2010

சனத்தும் இலங்கைக் கிறிக்கற்றும்

சனத் ஜெயசூரியா... இலங்கையர்களின் மாபெரும் கதாநாயகனாக இருந்தவர். அண்மைக்காலமாக விரும்பத்தகாத ஒருவராக கிறிக்கற் இரசிகர்களுக்கு மாறியிருக்கிறார். எதிரணிகள் சனத் இற்கு என்று மட்டுமே தலையைப் பிய்த்து தனியே திட்டங்கள் வகுத்த காலங்களெல்லாம் உண்டு.



படம்: நன்றி gossip lanka





1989 ஆம் ஆண்டு பின்வரிசையில் துடுப்பெடுத்தாடி பின்னர் 93ம் ஆண்டில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மாறிய பின்னர் ஒருநாள் கிறிக்கற் போட்டிகள் விளையாடும் முறையையே மாற்றியவர் என்ற பெருமை சனத் இற்கு உண்டு.

எவ்வப்போது விமர்சனங்கள் முன்வைக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் பெரிய சதமொன்றையோ, சிறந்த சகலதுறைப் பெறுபேறொன்றையோ வழங்கி விமர்சகர்களை 'form is temperament, class is permanent' என்று  சொல்ல வைக்கும் வீரன், ஆனால் அண்மைக்காலமாக, ஏன் 2007 உலகக் கிண்ணத்திற்குப் பிறகென்றே சொல்லலாம், சறுக்கி வருகிறார்.
2007 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு இலங்கை அணி சார்பாக சனத் பங்குபற்றிய 51 போட்டிகளில், சனத் 50 போட்டிகளில் துடுப்பெடுத்தாடி பெற்ற ஓட்டங்கள்  1385, சராசரி 27.70.
அவரின் ஒட்டுமொத்த சராசரியான 32.43 ஐ விட கிட்டத்தட்ட 5 ஓட்டங்கள் குறைவானது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அவரின் சராசரியான 34.90 ஐ விட கிட்டத்தட்ட 7 ஓட்டங்கள் குறைவானது.

(சனத்தின் அடித்தாடும் வீதம் 2007 உலகக் கிண்ணத்திற்குப் அதிகரித்திருக்கிறது.
கிட்டத்தட்ட 5 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.
ஆனால் இது பெரும்பாலும் ஆடுகளங்கள் தட்டையாக ஆக்கப்பட்டதன் விளைவே தவிர பெரியளவில் சனத் அடித்தாடினார் என்று அர்த்தமல்ல...
சங்கக்காரவின் அடித்தாடும் வீதம் 2 வீதத்தாலும், சச்சினின் அடித்தாடும் வீதம் 3 வீதத்தாலும், பொன்ரிங்கின் அடித்தாடும் வீதம் 2 வீதத்ாலும் அதிகரித்திருக்கிறது. )

ஆனால் இந்த சராசரி என்பதை விட அவை பெறப்பட்ட காலகட்டங்களை வைத்துப் பார்த்தால் பெற்றால் தொடர்ந்து ஓட்டங்கள், பெறாவிட்டால் தொடர்ச்சியாக பெறாமல் விடுதல் என்பது சனத்தின் வழக்கமாக அண்மைக்காலமாக மாறிப்போனது.
அதன் பின்னர் ஒரு தடவை பெற்ற சதம் என்பது கிட்டத்தட்ட 25 போட்டிகளில் சாதாரண துடுப்பெடுத்தாடும் திறமையைக் காட்டினாலும் அணியில் இடம் என்பது நிச்சயிக்கப்பட்டதாகவே இருந்து வந்தது.
அதற்கு சனத் என்ற பெயர் அணிக்குக் கொண்டுவரும் மனரீதியான பலமும், அவரின் முன்னைய சாதனைகளும், உபுல் தரங்க உட்பட்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சர்வதேச ரீதியாக தங்களை காட்டிக் கொள்ள முடியாமையும் உதவியது.

எனினும் டில்ஷானின் முன்னேற்றம், உபுல் தரங்க இறுதிக் காலத்தில் ஓரளவுக்கு சிறப்பாக மீண்டும் துடுப்பாடத் தொடங்க சனத் இற்கு ஆப்பு ஆரம்பமானது.

கடந்த இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில் அணியின் தோல்விக்காக கடுமையாக உழைத்த பெருமை பல விமர்சனங்களை சனத் இற்குப் பெற்றுத் தந்தது.

சனத் போன்ற வீரர்களுக்கும், குமார் சங்கக்கார, மஹேல போன்றவர்களுக்குமிடையில் பாரிய வித்தியாசம் உண்டு.
சங்கா, மஹேல போன்றவர்கள் classic style batsmen என்றழைக்கப்படுகையில் சனத் போன்றவர்கள் நுட்ப ரீதியாக சங்கா போன்றவர்களைப் போல் சிறந்து இருக்க மாட்டார்கள், see the ball, hit the ball என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள், அதைப் போல அடித்தாடுவதே அவர்களது ஒரே முறை.
இவர்கள் போர்ம் இல் இருக்கும் போது இவர்கள் அடித்து நொருக்குவார்கள், ஆனால் சிறிதாக போர்மை இழந்தாலே இவர்களின் துடுப்பாட்டம் பெரிதாகப் பாதிக்கப்படும்.
கடந்த உலகக் கிண்ணத்தில் டில்ஷான் தடுமாறியதற்கும் இதுவே காரணம்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டில்ஷான் நியூசிலாந்துக் கழகமொன்றிற்காக ஆடச் சென்றார். அங்கு பெரிதாக சாதிக்கவில்லை. பின்னர் இங்கு இலங்கையில் நடந்த இருபதுக்கு இருபது தொடரில் ஒரே ஒரு போட்டியி்ல் விளையாடி முதற்பந்திலேயே ஆட்டமிழந்தார் என்று நம்புகிறேன்.
பின்னர் ஐ.பி.எல் இல் சில போட்டிகளில் விளையாடி அங்கும் பெரிதாக ஜொலிக்க முடியாமல் போக அழுத்த்தத்தால் உலகக்கிண்ணப் போட்டிகளில் முன்பளவு ஜொலிக்க முடியாமல் போனது.
இத்தனைக்கும் டில்ஷான் சனத்தை விட நுட்ப ரீதியாக சிறந்தவர், ஆனால் மஹேல, சங்கா அளவிற்கு இல்லாதவர்.

கைகளுக்கும், கண்களுக்குமிடையிலான இடைத்தொடர்பே இவர்களின் மிகப்பெரிய பலம்.
Hand-eye co-ordination என்பார்கள்.
வயது அதிகரிக்க இப்படியான துடுபு்பாட்ட வீரர்கள் தடுமாற வாய்ப்புக்கள் உண்டு.
எனினும் சனத் ஜெயசூரிய தன்னை முழு உடற் தகுதியுடன் பேணியதால் சனத் ஆல் ஓரளவுக்காவது பிரகாசிக்க முடிந்தது.
எனினும் இப்போது அந்த எல்லையை சனத் அடைந்து விட்டார் போல் தெரிகிறது.
அதுவும், இருபதுக்கு இருபது போட்டிகளில் தனித்து ஒருவர் எவ்வாறு போட்டிகளை வெல்ல முடியுமோ அவ்வாறே தனித்து ஒருவராலும் போட்டிகளைத் தோற்க வைக்க முடியும்.
ஆகவே இந்த வகைப் போட்டிகளில் 10 பேர் கொண்ட அணியாக விளையாடுவது என்பது கடினமே, அந்த அணி அரையிறுதி வரை சென்றதே பெரிய விடயமென்பது என் கருத்து.


இப்படியான சூழ்நிலையில் 2011ம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை விளையாட விருப்பம் தெரிவித்திருக்கிறார் சனத்.
உபகண்ட கிறிக்கற் சாதனையாளர்களில் பெரும்பாலானோர் போல வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்படும் நிலையை சனத் ஏற்படுத்தினாலும், நேரடி அரசியல் பலம் சனத்தை அணிக்குள் வைத்திருக்கலாம், ஆனால் அது அணியை எந்தளவுக்கு பாதிக்கும் என்பது வெளிப்படையானது.

2011 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் சிம்பாப்பே, இந்திய அணிகளோடு இலங்கை பங்குபற்றும் முக்கோணத்தொடர் இருக்கிறது, பின்னர் ஆசியக் கிண்ணப் போட்டிகள் இருக்கின்றன, பின்னர் இந்தியாவும், நியூலாந்தும் இலங்கையும் பங்குபற்றும் முக்கோணத் தொடர் இருக்கிறது, பிறகு அவுஸ்ரேலியாவுக்கெதிராக ஒருநாள் தொடர் இருக்கிறது.
(இந்திய இலங்கை அணிகள் ஒன்றுக்கொன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமுமே விளையாடும் கொடுமை வேறு கதை...)
கிட்டத்தட்ட 15 போட்டிகளில் (முக்கோணத் தொடர்களில் இறுதிப் போட்டிகள் நிச்சயமில்லாதபடியால் தெளிவான எண்ணிக்கையைக் குறிப்பிட முடியாது) 2011 உலகக் கிண்ணத்துக்கான அணியைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இலங்கைக் கிறிக்கற் சபை சனத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறது என்பதும் சிம்பாப்வே முக்கோணத் தொடரில் சனத்திற்கு 'ஓய்வு' வழங்கியிருப்பதும் 2011 உலகக் கிண்ணத்தில் சனத் பங்குபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன போல் தெரிகிறது.
அரசியலைத் தாண்டி கிறிக்கற்றும், திறமைகளும் முன்கொணரப்படுமா?

---
Chat Google Talk: bloggergopi 
Contact Me FacebookTwitterBlogger