Saturday, July 31, 2010

விமர்சனப் புண்ணாக்குகள்...

நிறைய நாட்களாக எனக்கிருந்த எரிச்சலைக் கொட்டுவதற்கான பதிவு இது.
கிறிக்கற்றை ஆழ விரும்புவன் என்ற ரீதியில் அடிக்கடி நான் எரிச்சலடைந்து கொள்ளும் விடயங்கள் இவை.
தம்மை விமர்சகர்கள் என்றழைத்துக்குக் கொள்ளும் மேதாவிகள் அனேகமாக ஏதோ ஒரு பக்கத்திற்கு சார்பாகவே செயற்படுகின்றனர், அல்லது வெறும் முட்டாள்தனமான அறிக்கைகளை வெளியிட மட்டுமே புரியும்.

இந்தக் கிறிக்கற் விமர்சகர்கள் என்று சொல்லிக் கொள்வோர் பற்றி அறிய வேண்டுமானால் தெளிவாக, இலகுவாக உள்ள விடயம் இந்த ரெஸ்ற், ஒருநாள் போட்டிகளுக்கு ஆபத்து என்று இவர்கள் குழறிக் கொண்டிருக்கும் நிலைதான்.
இருபதுக்கு இருபது போட்டிகள் பெரும் வெற்றியையும், ஆதரவையும் இரசிகர்களிடையே பெற்றுக்கொள்ள தொடங்கினார்கள் இந்த விமர்சகர்கள்.
ரெஸ்ற் கிறிக்கற்றுக்கு ஆபத்து, மக்கள் ரெஸ்ற் கிறிக்கற்றை  வெறுக்கப் போகிறார்கள், ரெஸ்ற் கிறிக்கற் சாகப் போகிறது என்று குழறத் தொடங்கினார்கள்.
கொஞ்ச நாட்களாக முன்பு எந்த கிறிக்கற் இணையத்தளத்தை திறந்தாலும் இந்த ஓலம் தான்.
இவர்கள் இப்படி குழறிக் கொண்டிருக்க ஷேன் வோண் திடீரென ஒரு அறிக்கை விட்டார். 'இருபதுக்கு இருபதுக்கு போட்டிகளுக்கு வழிவிட்டு ஒருநாள் போட்டிகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ரெஸ்ற் போட்டிகளுக்கு ஆதரவு எப்போதும் இருக்கும். ஒருநாள் போட்டிகள் தான் ஆபத்தில் நிற்கின்றன' என்று விட்டார்.
உடனே அதுவரை காலமும் ரெஸ்ற் போட்டிகள் அழியப் போகிறது என்று குழறிக் கொண்டிருந்த அந்த அறிக்கையின் பின்னர் இந்த விமர்சகர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள்  'ஒருநாள் போட்டிகள் அழியப் போகிறது ஒருநாள போட்டிகள் அழியப் போகிறது' என்று குழறத் தொடங்கினார்கள்.
வேண்டுமானால் வோணின் அறிக்கைக்கு முன்னர், பின்னர் என்று இந்த இணையத்தளங்களையும், விமர்சகர்கள் என்று சொல்லிக் கொள்வோரின் பக்கங்களையும் பாருங்கள்.
வோணின் அறிக்கைக்கு முன்னர் ரெஸ்ற் அழியப் போகிறது என்று துடித்தவர்கள், பின்னர் ஒருநாள் போட்டிகள் அழியப் போகிறது என்று துடித்துக் கொண்டிருக்கிறர்கள்.

இவர்களின் அலப்பறைக்கு அளவில்லை, ஒரு ரெஸ்ற் போட்டி மிக விறுவிறுப்பாக நடந்தால் 'good advertisement for test cricket' என்று எல்லோரும் அறிக்கை விடுவார்கள். ரெஸ்ற் போட்டிகள் சுவாரசியமானவை என்பதற்கு உதாரணம் என்று அறிக்கை விடுவார்கள்.
ஒரு ரெஸ்ற் போட்டி சுவாரசியமற்று சப்பென்று முடிந்தால் உடனே 'bad advertisement for test cricket' என்று தொடங்கிவிடுவார்கள்.
எனக்குத் தெரிந்து இவை இரண்டையும் மாற்றிப் போட்டுக் கதைத்தே காலத்தை ஓட்டிவிடுவார்கள்.
ஒருநாள் போட்டிகளுக்கும் இப்படித்தான்.
ஆசியக்கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான், இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டி இறுதிவரை விறுவிறுப்பாக நடக்க 'good advertisement for ODI cricket' என்று பாராட்டித் தள்ளினார்கள்.
பங்களாதேஷ், பாகிஸ்தானிய அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்த உடனே 'bad advertisement for ODI cricket' என்று குழறினார்கள்.
பாகிஸ்தான் - பங்களாதேஷ் போட்டியில் பாகிஸ்தான் விதித்த 386 என்ற இலக்கை பங்களாதேஷ் தமிம் இக்பாலின் ஆட்டமிழப்பிற்குப் பின்னர் துரத்துவதை நினைத்துப் பார்க்காமல் சாதாரணமாக ஆடினார்கள்.
கிறிக்கின்போ பந்துக்கு பந்து நேர்முக வர்ணனையில் வர்ணனை செய்தவரும், தம்மை இரசிகர்கள் என்று காட்டிக் கொள்வோரும் பங்களாதேஷ் அடித்து ஆடி ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை, இப்படி ஆடக்கூடாது, ஆடினால் ஒருநாள் போட்டிகளுக்கு பிழையான விளம்பரமாக மாறிவிடும் என்று பங்களாதேஷை படுமோசமாக திட்டிக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் இயலாமல் போக, நான் அவர்களுக்கு கருத்து அனுப்பினேன்.
'பங்களாதேஷை தொடர்ந்து திட்டிக் கொண்டிருக்கிறீர்களே, இத்தனை பெரிய ஓட்டங்களை பெற்றுவிட்டும் பாகிஸ்தான் அணி 25 ஆவது பந்துப்பரிமாற்றத்திலே போட்டி தங்கள் முழு ஆதிக்கத்தில் இருக்க நான்கே நான்கு களத்தடுப்பாளர்களை மட்டுமே 30 யார் கோட்டுக்கு உள்ளே வைத்திருக்கிறீர்களே, அதற்கு என்ன மாதிரி?' என்று கேட்டேன்.
(Kangon: "I think you guys are bit too harsh on Bangladesh. How about Pakistan having only 4 fielders inside the ring, even though they've full, firm control over this match. Even Pakistan isn't going for wickets. So it's also a kinda negative cricket nah?" Strong point, but they did try for the first 20 overs. Guess on this wicket, they need batsmen to take some risk to get out  )
அதை ஆச்சரியகரமாக பிரசுரித்துவிட்டு அந்த வர்ணனையாளர் 'முக்கியமான கருத்து. ஆனால் பாகிஸ்தான் அணியினர் கூடிய வீரர்களை அந்தக் கோட்டுக்கு உள்ளே 20 பந்துப் பரிமாற்றங்கள் வைத்திருந்தார்கள்' என்று சொன்னார்.
அதற்கு நான் '20 பந்துப் பரிமாற்றங்கள் என்றால் அதில் 15 பந்துப்பரிமாற்றங்கள் பவர் பிளே. ஆகவே கட்டாயத்தில் பேரிலேயே வீரர்களை வைத்திருந்தார்கள். வெறுமனே பங்களாதேஷ் அணியை மட்டுமே negative cricket என்று குறை சொல்லாதீர்கள். நடுநிலையாக இருங்கள்' என்று அனுப்பினேன். பிரசுரிக்கவில்லை.

இப்படித்தான்,
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு வந்தபோது காலியில் மிகப் பின்னிலையில் நின்று இலங்கை அணி வெற்றிபெற்றபோது இந்த விமர்சகர்கள் ரெஸ்ற் கிறிக்கற்றை வழமை போல புகழந்தார்கள்.
அண்மையில் முடிவடைந்த SSC போட்டி சமநிலையில் முடிந்ததும் திரும்ப bad advertisment for test cricket என்று பழைய பல்லவியைத் தொடங்கிவிட்டார்கள்.
அத்தோடு ஏதோ இலங்கை இதுவரை காலமும் தொடர்ந்து முடிவில்லாத போட்டிகளையே தந்தது போல ஒரு மாயையை உருவாக்கித் தொடங்கிவிட்டார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற 22 ரெஸ்ற் போட்டிகளில் இலங்கையில் வெறுமனே ஐந்தே ஐந்து போட்டிகள் தான் சமநிலையில் முடிவடைந்திருக்கின்றன.
அதே காலப்பகுதியில் இந்தியாவில் நடைபெற்ற 23 ரெஸ்ற் போட்டிகளில் 9 போட்டிகள் சமநிலையில் முடிவுற்றிருக்கின்றன.
இங்கிலாந்தில் கூட 37 போட்டிகளில் 11 சமநிலை முடிவுகள்.

ஆகவே இத்தனை நாள் இதற்காக இலங்கையைப் புகழ்ந்தார்களா?
ஒருபோட்டி மோசமாக மாறியவுடன் தொடங்கிவிட்டார்கள்.
அந்த ஆடுகளம் மிக ஒருபக்கச் சார்பானது.
ஆனால் அந்த மைதானத்தில் கடைசி 18 போட்டிகளில் நான்கே நான்கில் மட்டும் தான் முடிவுகள் எட்டப்படவில்லை.
ஆகவே முடிவுகளைத் தராமலிருப்பது இந்த மைதானத்திற்குரிய வழக்கமல்ல.
ஒரு போட்டியில் பிழைத்ததற்காக தொடங்கவிட்டார்கள்.

டெல்லி பெரேஷா கோட்லா மைதானத்தில் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டபோது எத்தனை விமர்சகர்கள் அந்த மைதானத்திற்கெதிராக அதை விமர்சித்து ஆக்கம் எழுதினார்கள் என்று விளங்கவில்லை.

அடுத்து,
பிஷன் பேடி....
கடந்த பலவருடங்களாக முரளி மீது பிஷன் பேடி கொடுத்து வந்த ஏராளமான வசைகளுக்கு அண்மையில் முரளிதரன் அழகாககப் பதில் சொல்லியிருந்தார்.
பிஷன் பேடி ஒரு சாதாரண பந்துவீச்சாளர், நவீன காலத்தில் அவர் விளையாடியிருந்தால் ஏராளமான ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருப்பார் என்று நேரடியாக பிஷன் பேடியைத் தாக்கியிருந்தார்.
எனக்கு பெரும் மகிழ்ச்சி.
பிஷன் பேடி என்று மூளை வளர்ச்சி குறைந்தவர் (இதற்கான விளக்கம் பின்னுக்கு அளிக்கிறேன்.) முரளியைத் தொடர்ந்து விமர்சித்து வந்தபோது எனக்கே ஆத்திரம் வரும், முரளி எப்படிப் பொறுத்துக் கொள்கிறார் என்று யோசிப்பேன்.
அண்மையில் முரளி அடித்தார் அடி.
ஐசிசி முரளிதரனின் பந்துவீச்சில் குறை இல்லை என்று ஏராளமான பரிசோதனைகள் செய்த பின்பு அறிவித்த பின்பும் முரளிதரன் பந்தை எறிகிறார் என்று மூளை வளர்ச்சி உள்ள ஒருவரால் சொல்ல முடியுமா?
இன்று உங்களுக்கு அருகில் வந்து ஒருவர் பூமி தட்டையானது என்று உங்களோடு வாதம் புரிந்தால் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?

முரளிதரன் பேடியைத் தாக்கியதும் 'நடுநிலையாளர்கள்' விழித்துக் கொண்டனர்.
பிரசன்ன என்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், மனிந்தர் சிங் ஆகியோர் நடுநிலையைத் தொடங்கினர்.
வசமாக மாட்டிக்கொண்ட பின்னும் நித்தியானந்தா தன்னை நல்லவனாக் காட்டிக் கொள்வது போல் இதுவரை காலமும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டிவிட்டு முரளிதரனின் அந்த அறிக்கைக்கு பேடி 'எனது பார்வை உங்களுக்கு விளங்கும். நான் முரளிதரன் அளவுக்கு கீழே இறங்கவிரும்பவில்லை' என்று அறிக்கை விடுகிறார்.
அடங்கொய்யால...
இவ்வளவுகாலமும் மூளை குழம்பி ஈட்டி எறிபவர், ரன் அவுட்கள், குண்டு போடுபவர் என்று சொன்னது யார்?

அதற்குள் பிரசன்ன என்பவர் 'முரளி அதைத் தவிர்த்திருக்க வேண்டும். முரளி பொறுப்புடன் கருத்துக்களைத் தெரிவித்திருக்க வேண்டும். முரளி அப்படிப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்திருக்கக்கூடாது' என்று நடுநிலைமை வகிக்கிறார்.
கொய்யால...
இவ்வளவு காலமும் பேடி முரளி மீது வசைமாரி பொழிகையில் எங்கயய்யா போய் இருந்தீர்கள்?
அத்தோடு நிறுத்தாமல் தனக்கும் மூளை வளர்ச்சி குறைவு என்பதைக் காட்ட 'முரளிக்காக ஐசிசி விதிகளை மாற்றியது' என்கிறார்.
முன்னர் காணப்பட்ட விதிகளின் பிரகாரம் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் உலகில் ராம் நரேஷ் சர்வானைத் தவிர மற்ற அனைவரும் கூடுதலாக மடித்திருந்ததை கண்டுபிடித்துத்தான் மாற்றியிருந்தார்கள்.

மனிந்தர் சிங் உம் அதே கருத்தைச் சொல்லி தன் மூளை வளர்ச்சியையும் நிரூபித்துக் கொண்டார்.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம்,
முரளிதரன் அந்த அறிக்கையை விட்டதும் ஹர்ஷா போக்லே தனது ருவிற்றர் பக்கத்தில் 'ஒருவர் மீது ஒருவருக்கு எப்ப வேண்டுமானாலும் கருத்து இருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க வீரரை முரளி அவ்வாறு சாதாரணமானவர் என்று குறிப்பிட்டிருக்கக்கூடாது என்று முரளிக்கெதிராக கருத்துச் சொன்னார்.
இந்த நடுநிலையாளருக்கும் இதுவரை பேடி முரளி மீது கதைத்தது தெரியாது, இதுவரை பேடியை எதிர்த்திருக்கிறாரா என்பது அடுத்த கேள்வி, மற்றும்படி ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை கம்பீர் 'சாதாரணமான அணி'
 என்று குறிப்பிட்டபோது எதிர்ப்புகள் கிளம்ப 'பரிசளிப்பில் வீரர்கள் சம்பிரதாயபூர்வமாகக் கதைத்தால் சுவாரசியமற்றிருக்கும். தங்கள் கருத்துக்களை வெளியில் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்' என்று 'சாதாரணமான' என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தவர் தான் இந்த ஹர்ஷா போக்லே.
கம்பீர் 'சாதாரணமான' என்று விளித்த அணியில் ரெஸ்ற் போட்டிகளில் சாதனை படைத்த ஷேண் வோண் இருந்தார் என்பது கொசுறுத் தகவல்.
அப்போது 'சாதாரணமான' என்பதற்கு விளக்கம் சொன்ன ஹர்ஷா போக்லேயால் இன்று '55 என்ற strike rate கொண்ட ஒரு வீரருக்கு 80 என்ற strike rate கொண்ட பேடியைப் பார்த்தால் சாதாரண வீரராகவே தோன்றும்' என்று விளக்கம் சொல்ல முடியாமல் போனது ஏன்?

அதனால் தான் சொல்கிறேன்,
விமர்சனப் புண்ணாக்குகள் இவர்கள்....


****************************************************************************

கடந்த போட்டியில் ரந்தீவின் 'சாதனை' தவிர,
குமார் சங்கக்கார சேர் டொன் பிரட்மனின் சாதனை ஒன்றைச் சமப்படுத்தியிருந்தார்.
அதனை இந்த விமர்சனப் புண்ணாக்குகள் கவனிக்கவில்லை.
ஒரே மைதானத்தில் அதிக இரட்டைச் சதங்கள் என்ற சாதனை இப்போது சேர் டொன் பிரட்மன், குமார் சங்கக்கார, சேர் லியானார்ட் ஹட்டன் ஆகியோர் வசம் உள்ளது. மூவரும் ஒரே மைதானத்தில் 3 முச்சதங்களை தலா குவித்திருக்கின்றனர்.
சங்கக்கார SSC இலும், பிரட்மன் அடிலெய்ட்டிலும், ஹட்டன் 'தி ஓவல்' இலும்  இரட்டைச்சதங்களை 3 முறை குவித்திருக்கின்றர்.

சங்கக்கார மூன்றாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடி பெற்றுக்கொண்ட 7 ஆவது இரட்டைச்சதம் (மொத்தமாகவே 7 தான்.) அது.
இதன்மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த W.R.Hammond என்பவரை முந்தியிருக்கிறார். அவர் 6 இரட்டைச்சதங்கள்.
சங்கக்காரவை விட டொன் பிரட்மன் மட்டுமே முன்ணணியில் திகழ்கிறார்.
அவர் மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கி 9 இரட்டைச் சதங்களைப் பெற்றிருக்கிறார்.


இந்திய இரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி.
இலங்கை மண்ணில் தனது முதற்போட்டியில் சதமடித்த மூன்றாவது வீரராக சுரேஷ் ரெய்னா தன்னைப் பதிந்து கொண்டார்.
இதில் கவலைப்பட வேண்டிய விடயமென்னவெனில் மற்ற இருவரும் பாவத் அலாம் மட்டும் மொகமட் அஷ்ரபுல்.
இருவருமே இப்போது அணியில் இடம்கிடைக்க தள்ளாடுகிறார்கள். ;)
எனினும் இந்தியா சார்பாக தனது அறிமுகப் போட்டியில் சதமடித்த 4 ஆவது இந்திய இடக்கை வீரராக தன்னை சுரேஷ் ரெய்னா பதிந்துகொண்டார்.
அந்த 4 பேரில் கங்குலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 17, 2010

ஷகீர்கான் - முரளி இல்லாமையால் இத்தொடரில் தாக்கங்கள்...

உண்மையில் பலருக்கு ஷகீர் கான் ஒருவர் இல்லாமையால் ஏன் இந்தியாவின் பந்துவீச்சை பலமற்றது பலமற்றது என்கிறார்கள், முரளி கூட இரண்டாவது ரெஸ்ற் போட்டியோடு ஓய்வு பெறப் போகிறாரே அப்போது ஏன் இலங்கையின் பந்துவீச்சை பலமற்றது என்று சொல்வதில்லை என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.
ஆனால் அண்மைக்கால இந்திய அணியில் ஷகீர் கான் செலுத்திய ஆதிக்கம் அவ்வாறானது. முரளி அண்மைக்காலமாக அந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி உள்ளே ஆராய்ந்துகொண்டு போனால் அது பெரிய விடயமாக மாறிவிடும்.
பதிவெழுத முன்னர் மேலோட்டமாக சில விடயங்களை ஆராயும்போது எனக்கு ஷகீர்கானின் இழப்பு பெரிது என்று பட்டது.

(என் இதற்குமுந்தைய பதிவை வாசித்த பின் இதை வாசிப்பது உத்தமம். இது தனிப்பதிவல்ல... கடந்த பதிவின் ஒருவகைத் தொடர்ச்சியே.
எனினும்,

// {{ இந்தத் தொடர் கடுமையான, போட்டிகள் நிறைந்ததாக இருக்குமா என்றால் சந்தேகம் தான்.//}}
இருக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு..
சாகிர் இல்லாத இந்தியாவும் முரளி இல்லாத இலங்கையு தம் வலிமையை காட்ட அதிக மும்முரத்தொடு மோதும் என நம்புகிறேன்.
// என்ற லோஷன் அண்ணாவின் பின்னூட்டத்துக்கு என் கருத்தை ஒரு தனி மடலில் அனுப்பினேன்.
அதை அவர் பதிவாக மாற்றுமாறு சொன்னார்.
லோஷன் அண்ணாவுக்கு நன்றிகளோடு,  இந்தக் குட்டி(யான/னை) பதிவு. :P


முரளியின் இழப்பை விட ஷகீர்கானின் இழப்பு அதிகம்:
ஷகீர்கானின் இழப்பின் பின்னர் ஆக்ரோஷமாக பந்துவீச்சால் இலங்கையோடு மோதுமளவிற்கு இந்தியாவால் முடியாது என்று நம்புகிறேன்.
மறுபுறத்தில் இலங்கைக்கு முரளியின் இழப்பு பந்துவீச்சு ரீதியாக பெரியளவில் இருக்காது என்று நம்புகிறேன். ;)

2008ம் ஆண்டு இந்தியாவுக்கெதிரான ரெஸ்ற் தொடருக்குப் பின்னர்,
இந்தியாவுக்கு எதிராக முரளி:
ரெஸ்ற் - http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;opposition=6;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=8;template=results;type=bowling

முரளி முன்பளவிற்கு அபாயகரமாக இருக்கவில்லை.
ஹேரத்துடன் ஒப்பிடும் போது முரளியின் விக்கற் கைப்பற்றும் வீதத்தைப் பார்க்கவும். (Strike rate)

முரளி - 101.2 பந்துகளுக்கு ஒரு விக்கற்,
ஹேரத் - 81.0 பந்துகளுக்கு ஒரு விக்கற். (20.2 பந்துகள் ஹெரத்தை விட அதிகமாக எடுக்கிறார் முரளி ஒரு விக்கற்றைக் கைப்பற்ற. )
(இந்தியத் தொடர் இது. பந்துவீச்சாளர்கள் அதிகமாக அடிவாங்கிய தொடர்)

ஆனால் மறுபுறத்தில் 2008 இலங்கைத் தொடருக்குப் பின் இலங்கைக்கெதிராக ஷகீர் கான் -
ரெஸ்ற் - http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;opposition=8;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=6;template=results;type=bowling

ஷகீர்கான் - 62.4 பந்துகளுக்கு ஒரு விக்கற்.
ஹர்பஜன் - 73.0 பந்துகளுக்கு ஒரு விக்கற்.

முரளியை விட 38.8 பந்துகள் குறைவாகத் தேவைப்படுகின்றன ஒரு விக்கற்றைக் கைப்பற்றுவதற்கு.
( ஸ்ரீசாந், ஒஜ்ஜா ஆகியோர் ஷகீர்கானை விட Strike rate இன் அடிப்படையில் முன்னிலையில் இருந்தாலும், ஸ்ரீசாந் எடுத்த 5 விக்கற்றுகள் ஸ்ரீசாந்தை முன் இடத்தில் நிறுத்துகின்றன. ஒஜ்ஜாவை ஷகீர்கான் அளவிற்கு இலங்கை வீரர்கள் பயப்படப் போவதில்லை என்று நினைக்கிறேன். ஷகீர்கான் கொண்டுவரும் அந்த mass ஐ ஒஜ்ஜாவால் இப்போதைக்கு தரமுடியாது என்று நினைக்கிறேன்.)


ஒரே ஒரு தொடரில் எப்படி முடிவு செய்வது என்றால் 2008ம் ஆண்டு இந்தியாவுக்கெதிராக ரெஸ்ற் தொடர் முடிவடைந்த பின்னர்,

இந்தியாவிற்கெதிராக முரளி -
ஒ.நா.போ - http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=2;filter=advanced;opposition=6;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=8;template=results;type=bowling

strike rate - 65.1.


2008ம் ஆண்டு இலங்கைக்கெதிரான தொடரின் பின்னர் இலங்கைக்கெதிராக ஷகீர்கான் -
ஒ.நா.போ - http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=2;filter=advanced;opposition=8;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=6;template=results;type=bowling

strike rate - 37.6
அதாவது முரளியை விட 27.5 பந்துகள் குறைவாகத் தேவைப்படுகின்றன விக்கற் ஒன்றைக் கைப்பற்ற.
ஒருநாள் போட்டிகளில் 27.5 பந்துகள் என்பது கிட்டத்தட்ட 5 பந்துப்பரிமாற்றங்கள் என்பதை நினைவுபடுத்துக.
(4 பந்துப் பரிமாற்றங்களும், 3.5 பந்துகளும் சரியாக. :P )

இத்தொடரில் முரளியின் ஓய்வு மனரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை என்றாலும், பந்துவீச்சு ரீதியாக அவ்வளவு இருக்காது.
ஆனால் மறுபுறத்தில் இந்தியாவுக்கு மனரீதியாக பெரிய தாக்கத்தோடு அவர்களின் strike bowler ஒருவரையும் இழக்கிறது.
ஆகவே இந்தியாவின் பந்துவீச்சு, இலங்கையோடு ஒப்பிடுகையில் பாரியளவு பாதிக்கப்படும்.
மோதுவது மோதாதது எல்லாம் ஹர்பஜனின் கையில் மட்டுமே... ;)

ஆகவே இந்தத் தொடரில் ஷகீர்கானின் இழப்பு இந்தியப் பந்துவீச்சுப் பக்கத்தை அதிகமாகப் பாதிக்கும்.
முரளியின் இழப்பு (முதற் போட்டியின் பின்னர்) பெரிதளவில் தாக்கத்தைச் செலுத்தாது என்று நம்புகிறேன்.


(அவ்வ்வ்வ்வ....
பதிவு.... பதிவு பதிவு.... :P )

Friday, July 16, 2010

அண்ணன் தம்பிச் சண்டை திரும்பவும்....

அண்ணன் தம்பிகள் ( © லோஷன் அண்ணா) திரும்பவும் சந்திக்கிறார்கள்.
அலுத்தேபோய்விட்ட இவர்களுக்கிடையிலான போட்டிகளின் நடுவே ரெஸ்ற் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
ரெஸ்ற் போட்டிகள் ஒருநாள் போட்டிகளளவிற்கு அலுப்பை தராது என்பது ஒருபுறமிருக்க, முரளிதரனின் ஓய்வு அறிவிப்பு தொடரை ஓரளவுக்கு கவனிக்கப்படும் தொடராக மாற்றியுள்ளது என்பது யதார்த்தம்.
2008ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதியிலிருந்து இவ்விரு அணிகளும் 41 சர்வதேசப் போட்டிகளில் சந்தித்திருக்கின்றன.
6 ரெஸ்ற் போட்டிகள், 4 சர்வதேச இருபதுக்கு இருபதுப் போட்டிகள் பரவாயில்லை என்றால் 31 ஒருநாள் போட்டிகள் தான் சலிப்பை அதிகரித்தன என்பது உண்மை.

பழையன எல்லாம் ஒருபுறமிருக்க,
முதலாவது ரெஸ்ற் போட்டி எதிர்வரும் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரை காலியில் நடைபெற இருக்கிறது.
முரளிதரனின் கடைசிப் போட்டியாக இந்தப் போட்டி இடம்பெற இருப்பதால் இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு, ஆகக்குறைந்தது உணர்வுகள் ரீதியாகவாவது.

ஆனால் இவற்றைத்தாண்டி, இந்தத் தொடர் கடுமையான, போட்டிகள் நிறைந்ததாக இருக்குமா என்றால் சந்தேகம் தான்.

இந்திய அணி வழமைக்கு மாறாக ஏதோ இரண்டாம்தர அணி போல் காட்சியளிக்கிறது.
ஷகீர்கான் என்ற ஒருவர் இல்லையென்றவுடன் அணியின் சமநிலை மோசமாகப் பாதிக்கப்படுகிறது.
ஷகீர்கானிற்கு மாற்றாக களமிறங்குவார் என்று கருதப்பட்ட ஸ்ரீசாந் உம் விளையாட முடியாமல் போக இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமற்றதாகக் காட்சியளிக்கிறது.
இந்தியாவின் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யாரென்று இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.
பயிற்சிப் போட்டியில் விளையாடிய மிதுன் விளையாடுவாரா அல்லது முனாப் பட்டேல் விளையாடுவாரா என்பது தெரியவில்லை.

ஆனால் அதையும் தாண்டி ஹர்பஜன் சிங் இன் உடல்நலக்குறைவு, இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக தெரிவு செய்யப்பட வேண்டியவர்களான அமித் மிர்ஷா அல்லது பிரக்ஜான் ஒஜ்ஜா ஆகியோர் பயிற்சிப் போட்டியில் இலங்கையின் பதினொருவர் அணியை பெரிதாக அச்சுறுத்தாதது கவலை தந்திருக்கும்.
எனினும் ஒஜ்ஜா விளையாடுவது அவரால் கைப்பற்றப்பட்ட விக்கற்றுகளால் ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.




ஆனால் பயிற்சிப் போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டம் அவர்களுக்கு சிறிது கவலையை அளித்திருக்கும்.
மென்டிஸை சிறப்பாக கையாளுவோம் என்று சொல்லிவிட்டு வந்து மென்டிஸூக்கு 6 விக்கற்றுகளை வாரிவழங்கியதை விரும்பியிருக்க மாட்டார்கள்.
எனினும், லக்ஸ்மன், ரெண்டுல்கர், ட்ராவிட் போன்றவர்கள் நிறைய நாட்களுக்குப் பிறகு சர்வதேச வீரர்களை எதிர்கொண்டதால் சிறிது தடுமாறியிருக்கலாம்.
அத்தோடு முக்கியமாக யுவ்ராஜ் சிங் இன் அதிரடி அவர்களுக்கு பெரிய நிம்மதியை வழங்கியிருக்கும். குறித்த form ஐ, அதிரடியை ரெஸ்ற் போட்டிகளில் யுவ்ராஜ் வழங்கினால் இந்திய அணி பிரச்சினைகளில் மாட்டாது.
எனவே ரெஸ்ற் போட்டிகளில் பயிற்சிப் போட்டியை விட சிறந்த துடுப்பாட்டத்தை இந்திய அணியிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்று நம்பலாம்.

இந்திய அணித் தெரிவுகளில் பெரிதாக வியப்புக்கள் இருக்க வாய்ப்புக்கள் இல்லை.
செவாக், ஹம்பீர், ட்ராவிட், சச்சின், லக்ஸ்மன், யுவ்ராஜ், டோணி, ஹர்பஜன், இசாந், மிதுன்/முனாப் , ஒஜ்ஜா

இலங்கை அணி ஒப்பீட்டளவில் குழப்பங்கள் குறைந்த அணியாகத் தென்பட்டாலும் அண்மைக்காலமாக தொடர்ச்சியின்மையை வெளிப்படுத்திவரும் நிலையைக் குறைக்க முயற்சி செய்வார்கள்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தரங்க பரணவிதான தொடர்ச்சியாக நல்ல ஆரம்பங்களைப் பெற்றுவந்தாலும் இன்னும் பெரிய ஓட்டமொன்றை பெறாமையும், உபுல் தரங்க பயிற்சிப் போட்டியில் அடித்தாடி ஓட்டங்களைக் குவித்தமையும் தரங்க பரணவிதானவிற்கு அழுத்தங்களை வழங்கும்.
இந்தத் தொடரில் பரணவிதானவிற்கு ஆப்பு வைக்காதுவிடினும், இனிவரும் தொடர்களில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் பரணவிதானவிற்கு உண்டு.

அடுத்தது தினேஷ் சந்திமாலின் எழுச்சி.
உலகின் மிகச்சிறந்த விக்கற் காப்பாளர் என்று சங்கக்காரவால் பிரசன்ன ஜெயவர்தன புகழப்பட்டாலும் அவரது துடுப்பாட்டம் பெரும்பாலும் அணிக்கு பெரிதாகத் தேவைப்படவில்லை என்றாலும், சில சமயங்களில் தேவைப்படும் நிலைமைகளில் தேவைப்பட்ட அளவிற்கு கொடுத்திருக்கிறாரா என்பது கேள்விக்குரியதே.
எனினும் இந்தியாவுக்கு எதிராக அண்மையில் அஹமதாபாத் இல் பெற்ற 154 ஓட்டங்கள் உடனடியாக அழுத்தங்கள் ஏற்படுவதிலிருந்து காப்பாற்றும் என்றாலும் தன்னை ஒரு துடுப்பாட்ட வீரராக வெளிக்காட்டாவிடில் இன்னும் சில வருடங்களில் சந்திமாலிடமிருந்து நிச்சயமாக அழுத்தங்களை எதிர்கொள்வார்.
இலங்கை கிறிக்கற் சபையும் சந்திமாலை ஆசியக்கிண்ணத்தொடரில் விளையாட விடாமல் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி தாங்கள் சந்திமாலை நீண்டகாலத்திற்குரிய ஒருவராக வளர்க்க விரும்புகிறோம் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.

ஆகவே இப்படியான இலகுவான தொடர்களில் தன்னை துடுப்பாட்ட ரீதியாக வளர்த்துக்கொள்ள பிரசன்னவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.


அடுத்தது வேகப்பந்து வீச்சாளர்கள்.

தம்மிக்க பிரசாத், மலிங்க, சானக வெலகதர, டில்ஹார பெர்ணான்டோ என்று நால்வர் இரு இடங்களைப் பிடிப்பதற்காக...
இதில் தம்மிக்க பிரசாத் இந்தியாவுக்கெதிராக 2 ரெஸ்ற் போட்டிகளை விளையாடி அதில் செவாக் ஐ இருமுறையும், ட்ராவிட், ரெண்டுல்கர், லக்ஸ்மன், ஹம்பீர், டோணி ஆகிய முன்னணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.

மறுபுறத்தில் சானக வெலகதர இந்தியாவிற்கெதிராக இந்தியாவில் தட்டையான ஆடுகளங்களில் ஓரளவுக்கு சிறப்பாக பந்துவீசியிருக்கிறார்.

மறுபுறத்தில் டில்ஹார பெர்னாண்டோ இந்தியாவில் IPL போட்டிகளில் அசத்தாலாகப் பந்துவீசியமையால் பின்னர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு இப்போது ரெஸ்ற் அணிக்கு மீள அழைக்கப்பட்டிருக்கிறார்.
பழைய டில்ஹார பெர்னாண்டோவாக அவரால் வலம்வரமுடியுமா என்பது கவனிப்புக்குரியது.

அடுத்தது லசித் மலிங்க.
மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்றப் போட்டிகளில் கலக்கியமையால், தன் உடற்தகுதியை நிரூபித்ததால் ரெஸ்ற் அணிக்கு மீள அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் ரெஸ்ற் போட்டிகளில் எப்படிப் பந்துவீசுகிறார் என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
இருபதுக்கு இருபது போட்டிகள் போலவோ அல்லது கடைசிநேரப் பந்துவீச்சுகள் போலவோ yorker களையும், slower ball களையும், slower bouncer களையும், bouncer களையும் வைத்து தனியே ரெஸ்ற் போட்டிகளில் காலமோட்டிவிட முடியாது.
மலிங்கவின் out-swinger கள் எந்தளவிற்கு சிவப்புப் பந்தில் வேலைசெய்கிறது என்பதை எதிர்பார்க்கிறேன்.

இந்த 4 பேரில் மலிங்க நிச்சயமாக விளையாடுவார்.
பெர்னாண்டோ விளையாட வாய்ப்புக்குறைவு.
பிரசாத்திடம் போவார்களா, வெலகெதரவிடம் போவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எனக்குத் தெரிந்து வெலகெதரவிடம் போவார்கள் என்று நினைக்கிறேன். இடது- வலது கைப்பந்துவீச்சாளர்கள் என்ற வி்த்தியாசமும், ஸ்விங்-வேகம் என்ற வித்தியாசத்தையும் ஏற்படுத்த வெலகெதர, மலிங்க ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்க வாய்ப்புகள் உண்டு.

சுழற்பந்துவீச்சில் முரளி, ஹேரத் ஆகியோர் களமிறங்குவர் என்று நினைக்கிறேன்.
முரளி நிச்சயம், ஹேரத்தை முந்தி முதலாவது போட்டியில் சுராஜ் ரந்திவ் களமிறங்க வாய்ப்புகள் இல்லை.
இரண்டாவது போட்டியில் மென்டிஸ் அணிக்குள் சேர்க்கப்பட்டால் சுராஜ் ரந்திவா, மென்டிஸா என்ற கேள்வி எழும்.
சுராஜ் ரந்திவ் விளையாடுவதை நான் விரும்புகிறேன், ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடியமையால் ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் மஹ்ரூவ் இற்கு வாய்ப்புக் கொடுத்து அடிவாங்கியதை இலங்கை கிறிக்கற் தேர்வுக்குழு மறக்காது என்று நம்புகிறேன்.

எனது தெரிவுகள்.

துடுப்பாட்டம் -இலங்கை - டில்ஷான் - இந்தியாவின் ஆரம்பப்பந்து வீச்சாளர்களின் சறுக்கல்கள் டில்ஷானிற்கு பெரிதும் உதவும் என்று நினைக்கிறேன்.

துடுப்பாட்டம் - இந்தியா - ட்ராவிட் அல்லது லக்ஸ்மன்.

பந்துவீச்சு - இலங்கை - ஹேரத்

பந்துவீச்சு - இந்தியா - ஹர்பஜன்

மொத்தத்தில் இலங்கைக்கு அண்மைக்காலத்தில் கிடைத்த சிறந்த ரெஸ்ற் முடிவுகளில் ஒன்றாக இது மாற வாய்ப்புகள் அதிகம்.
காலி - இலங்கை வெற்றிபெறுமென நினைக்கிறேன்.

காலி ஆடுகளம் - கடந்த முறை இலங்கை பாகிஸ்தானை 4ஆவது இனிங்ஸ் இல் புரட்டியெடுத்த மைதானம்.
ஸ்விங் கிடைத்திருந்தது, வழமையைப் போல் ஸ்பின் உம் கிடைக்கும்.
முதலாவதாகத் துடுப்பெடுத்தாடுவது வெற்றிபெற வாய்ப்புகளை அதிகரிக்கும்.

இலங்கை வெற்றி பெறாவிட்டாலும் சிறந்த போட்டிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது.
இரு அணிகளும் உச்சபட்ட திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.



மில்லியன் டொலர் கேள்வி: முரளி 8 விக்கற்றுகளை எடுத்து 800 விக்கற்றுகள் என்ற மைல்கல்லை அடைவாரா?
என் பதில்: அடைய மாட்டார் என்று சொல்லவில்லை, அடைந்தால் சிறப்பு என்கிறேன்.


படங்கள்: நன்றி கிறிக்கின்போ

Saturday, July 10, 2010

நெதர்லாந்து கால்பந்து அணிக்கு கடிதம் எழுதுகிறேன்...

அன்பான நெதர்லாந்து கால்பந்தாட்ட அணிக்கு,
என்ன உலகம் மின்னஞ்சல், இணையம் என்று முன்னேறிவிட்ட நிலையில் கடிதம் எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? எங்கள் தலைவர், தமிழ்மக்களின் ஏக தலைவர், மக்களைக் காக்க வந்த தெய்வம் (இங்க மட்டும் இப்படி சொல்லலாம்.) ஐயா கலைஞரின் வழிவந்த தமிழன் நான். எனக்கு கடிதம் மேல் அப்படி ஒரு பற்று.
நான் இலங்கையின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த(?)/வாழும் பகுதியிலிருந்து வந்த ஒரு மாணவன்.
எங்கள் பகுதிகளில் காற்பந்தாட்டமெல்லாம் பெரிதாக பிரபலமில்லை. கிறிக்கற்றை மென்று, குடித்து, உண்டு வாழும் கூட்டம் நாங்கள்.
பிறகு இங்கு கொழும்புக்கு வந்தும் கிறிக்கற்றோடே நின்று கொண்டேன்.
கால்பந்தாட்டம் என்றால் எத்தனை ஓவர்கள் வீசுவார்கள் என்று கேட்குமளவிற்கு இல்லையென்றாலும் பெரிதாக ஈடுபாடு இருக்கவில்லை.
உங்களது உலகக்கிண்ணப் போட்டிகள் தொடங்குகிறது என்று எல்லா இடமும் தொடங்க நான் மட்டும் ஆசியக்கிண்ண கிறிக்கற் போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரி, ஊரெல்லாம் பார்க்கிறார்கள் என்று நானும் பார்க்கலாம் என்று இங்கிலாந்து ஜேர்மன் அணிகளுக்கிடையிலான போட்டியைப் பார்த்தேன்.
அதில பந்து கோல் கம்பத்துக்குள் போன போதும் அதை கோல் என்று வழங்கவில்லை, நாங்கள் முன்பு ஊரில் எப்போதாவது கால்பந்து விளையாடும்போது அந்தக் கோட்டைத் தாண்டி உள்ளே போனால் கோல் என்று தான் விளையாடுவோம்.
எனக்கு ஒரே குழப்பம்.
அதற்கிடையில் விதிகளை மாற்றிவிட்டார்களா என்ற ஒரே சந்தேகத்தில் மண்டையைச் சொறிந்து கொண்டிருந்தேன். அதற்கு முன்னர் ஏதோ ஒருநாள் பார்த்த போட்டியிலும் கோல் காப்பாளர் பந்தைப் பிடித்துவிடடு அந்தக் கோட்டை தாண்டிவிட்டு வெளியில் ஓடிவந்தார். கோல் வழங்கப்படவில்லை.
அந்த வுவுசெலாவோ பணியாரமோ தாற இரைச்சலால தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தை நன்றாகக் குறைத்துவிட்டே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் 5 நிமிடம் அதன் சத்தத்தைக் கேட்டதால் தலையிடி வேறு வந்துவிட்டது. எனவே பாதியுடன் நிறுத்திவிட்டு உறங்கிவிட்டேன்.

இப்படி உதாபந்தாட்டம் பார்க்கும் என் வரலாறு இருக்கிறது.
திடீரென ஏதோ 'போல் ஒக்ரோபஸ்' என்கிறார்கள்.
எங்கள் ஊர் வெத்திலைச் சாத்திரி கணிக்க முடியாததையெல்லாம் அவன் (விக்கிபீடியா புரொபைல் பார்த்தேன். ஆண் என்று போட்டிருந்தார்கள். நல்ல காலம் பெண் என்றால் பெண்ணுரிமைப் பிரச்சினை ஆகியிருக்கும் நான் திட்டியிருந்தால்) கணிக்கிறானாம்.
அவனது வரலாறில் கூட இரண்டே இரண்டு போட்டியைத்தான் பிழையாகச் சொல்லியுள்ளானாம்.
உந்தப் புலுடாக்கள நம்பிறதுக்கு வேணுமெண்டு உந்தக் கஞ்சாச் சுவாமிய நம்பிற முட்டாள்களிற்ற போய்ச் சொல்லுங்கோ.
கஞ்சாச் சாமி எண்டதும் ஞாபகம் வருது. இலங்கையின் முன்னணி தமிழ் பத்திரிகை ஒன்றில் நேற்று உந்தக் கஞ்சாச் சாமிகளுக்கு முழுப்பக்கத்தில் விளம்பரம் போட்டிருந்தார்கள். இன்று முன்பக்கத்தில் விளம்பரம் போட்டிருக்கிறார்கள். பத்திரிகைகள், ஊடகங்கள் சமூக சேவைகளை மட்டும் செய்ய முடியாது என்றாலும் சில இடங்களில் பொறுப்பாக நடந்து கொள்வது முக்கியமென்று நான் நினைக்கிறேன். கஞ்சாச் சாமியின் விளம்பரத்தை ஏற்பது கஞ்சாவுக்கு விளம்பரம் கொடுப்பது போலாகாதா?
அதே போல அவர்கள் விளம்பரப்படுத்தும் குறித்த நிகழ்வு கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் தமிழ்ப் பாடசாலை மைதானத்தில் தான் நடைபெறப் போகிறதாம். பாடசாலை கண்டிப்புடன் நடக்க வேண்டியது என்பதும், பிழையான உதாரணமாக தன்னை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மனதில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்தக்கூடாது என்பதுவும் என் எதிர்பார்ப்பு.
யாருமே தனியாக போராட முடியாது என்பதுவே யதார்த்தம், அன்று வெள்ளவத்தையில் கஞ்சாச் சாமிகளின் பிரசாரச் சுவரொட்டியைக் கண்டாலும், அதை கிழிக்க வேண்டுமென்று ஓர் உந்துசக்தி வந்தாலும் நெருக்கடியான சனசந்தடி உள்ள வீதியில் அதைத் தனியாகச் செய்ய எனக்கு தைரியம் போதாமலிருந்தது. ஆகவே இணைந்து செயற்படவேண்டும் எல்லோரும், எல்லா இடத்திலயும்.

சரி,
நாங்கள் உங்கட விடயத்துக்கு வருவோம்.
அந்தப் பாழாப் போன ஒக்ரோபஸ் ஸ்பெயின் அணியை இந்த இறுதிப்போட்டியில் வெல்லும் என்று கணித்திருக்கிறதாம்.
உங்களுக்கு மனரீதியாக ஏதும் தாக்கம் இருக்குமோ தெரியாது, ஆனா ஏற்கனவே இரண்டுமுறை பிழையாகக் கணித்திருக்கிறது, (அதென்ன கணிப்பு? அது போய் அதில இருந்தது. கணிப்பு எண்டு சொல்லி நிறையப் புத்தகங்கள், சாதகங்கள் கொண்டு எங்கட சாத்திரிமார் புலுடா விடுறது தான் கணிப்பு ) அத்தோடு போல் ஒக்ரோபஸின் இறுதிப் போட்டிகளில் அதன் வரலாறு மோசம். :P
யூரோ 2008 போட்டிகளில் பிழையாகக் கணித்திருந்தது. ஆகவே கலக்கம் வேண்டாம்.
அத்தோடு அது ஜேர்மன் விளையாடும் பெரும்பாலான போட்டிகளில் (13 போட்டிகளில் 11 இல்) ஜேர்மனி அணியைத் தெரிவு செய்திருக்கிறது. (3ம் இடத்திற்கான போட்டியிலும் ஜேர்மனி அணியையே தெரிவு செய்திருக்கிறது இப்போது. )
ஆகவே இது ஒண்டும் பெரிய பிசுக்கோத்து வேலை இல்லை. ஜேர்மன் அணி அந்தப் 11 போட்டிகளில் 9 இல் வென்றது ஜேர்மனி அணியின் திறமையே தவிர, அது கணித்தல் எல்லாம் இல்ல...
போல் ஒக்ரோபஸூக்கு பாதுகாப்புக் கொடுப்பேன் என்று சொன்ன ஸ்பெயின் பிரதம மந்திரிக்கு நீங்கள் ஆப்பு அடிக்கோணும்.
என்னுடைய ஆதரவை உங்களுக்கு முழுமையாக வழங்குகிறேன்.
இப்படியான மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் என்றொரு அற்புதமான மனிதர் வாழ்ந்து, மக்களுக்காகவே உழைத்து மறைந்து போனார், அவர் போராடினது போல எங்களால போராட முடியாது என்றாலும், உங்களப் போல ஆக்கள் சிறப்பாக விளையாடி போல் ஒக்ரோபஸை மக்கள் புறக்கணிக்க செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
கால்பந்து பற்றி அறியா,
நெதர்லாந்து கால்பந்தாட்ட இரசிகன்.

இன்னொரு கடிதமும் இருக்கு,

அடேய் போல் ஒக்ரோபஸ் (ஒலிவர் வலன்சியக் ஊடாக),

நீ ஏதோ பெரிய விளையாட்டுக் காட்டுறியாம் எண்டு சொல்லுறாங்கள்.
எனக்கு கால்பந்து தெரியாது, அதில யார் வெல்லுவாங்கள் எண்டு எப்படி சாதாரணமாகக் கணிக்கிறார்கள் என்று தெரியாது.
நீ ஒரு அப்பனுக்கு பிறந்த ஒக்ரோபஸா இருந்தா நான் சொல்லுற நிபந்தனைகளில வெற்றியாளர தெரிவு செய்து காட்டு பார்ப்போம்.
கொழும்பு பிரேமதாசா கிறிக்கற் மைதானத்தில், பகலிரவு போட்டியில், சமபலமுள்ள இரண்டு கிறிக்கற் அணிகள் மோதும்போது இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணி வெல்லும் என்று 5 முறை தெரிவுசெய்து அதில் நீ வெறுமனே 3 முறை சரியாக இருந்தாலும் உன்னை பெரிய பிசுக்கோத்து என்று ஏற்றுக்கொள்கிறேன்.
முடியுமானால் சவாலுக்கு வா.

இப்படிக்கு,
ஜேர்மன் இரசிகர்களுக்கு முன்பே உன்னை கொன்றுபோடும் கொலைவெறியிலுள்ள அப்பாவி.