Monday, September 27, 2010

ஐ.நா சபை கூட்டம், பணிப்பெண்கள், பரீட்சைகள் - கலவைப் பதிவு

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது:
இலங்கையிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையில் பொதுக்கூட்டத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற குழுவினர்களுக்கு நியூயோர்க் ஹோட்டலொன்றில் 4 மாடிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பராக் ஒபாமா குழுவினர் வெறுமனே 10 அறைகளிலேயே தங்கியிருப்பதாகவும் எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியிருக்கிறது.
அதி சொகுசு விமான நுழைவுச்சீட்டுக்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க குற்றஞ்சாட்டியிருக்கிறது.
மக்களின் பணத்தை வீணே செலவுசெய்வதை எப்போதுதான் நிறுத்தப்போகிறார்களோ. :-(
ஆனால் இது மனிதர்களுக்கு சிறிய வயதிலேயே பழக்கப்படவேண்டிய பழக்கம் என்று நினைக்கிறேன்.
ஆரம்பத்திலிருந்து மற்றவரின் பணத்தில் கணக்கின்றி செலவுசெய்வது தொடர்கிறது.
பின்னர் பாடசாலைகளில் பாடசாலைப்பணத்தை வீணே செலவுசெய்வதில் மாணவர்களும் ஆசிரியர்களும் முன்நிற்பார்கள்.
அதுவும் விழாக்கள், நிகழ்வுகள் ஏற்பாடு செய்யும்போது பணத்தை இறைத்துத்தான் செய்வார்கள், அது அப்படியே ஜனாதிபதிப்பதவிக்கு வரும்வரை தொடர்கிறது.
ஒருபோதும் 130 பேர் கூட்டத்திற்குத் தேவைப்படமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
வெறுமனே 10 பேர் அங்கு செல்வதைத் தவிர்த்திருந்தாலும் ஏராளமான பணம் மீதமாயிருக்கும், அந்தப்பணத்தை ஹம்பந்தோட்டையிலுள்ள (வடக்கு, கிழக்குக்கு கேட்கேல.) பாடசாலைகளிலுள்ள வறிய மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்தினால் எவ்வளவோ பயன்படும்.
என்றுதான் இவைகளெல்லாம் நடைமுறைக்கு வருமோ... :-(


பணிப்பெண்களின் கஷ்ரங்களும் தொடரும் மெத்தனப்போக்கும்:
இலங்கையிலிருந்து செளதி அரேபியாவிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதி என்ற பெண்மணியின் உடலில் ஆணிகள் காணப்பட்ட விடயம் இன்றுவரை ஏனோதானா என்ற மனநிலையிலேயே அணுகப்படுவதாக உணர்கிறேன்.
சிறிதும் மனச்சாட்சியற்ற அந்தச் செயற்பாட்டை சிலர் நியாயப்படுத்த முயன்றதும், ஆரியவதியை மனநோயாளி என்றும், அவர் வேண்டுமென்றே தனக்குத்தானே ஆணிகளை ஏற்றினார் என்றும் தங்கள் கருத்துக்களைச் சொன்னவர்களும் உண்டு.
இன்றும் அந்தக் கொடூரத்தைப் புரிந்தவர்கள் மீது என்னவாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தெரியாது.
ஆரியவதி மனநோயாளி கிடையாது என்று வைத்தியர்கள் சொல்லியிருப்பதாக பி.பி.சி தெரிவித்திருக்கிறது. நல்லது. கொஞ்சப் பேர் வாயை மூடிக்கொள்வார்கள்.
ஆனால் எனக்கொரு சந்தேகம், ஆணிகள் ஏற்றப்பட்ட பின்னர் அந்த வலிகாரணமாகவும், காயங்கள், மன அழுத்தங்கள் காரணமாக அவருக்கு மனநோய் ஏற்பட்டிருந்தால் அதை எப்படிக் கண்டுபிடிப்பது? எத்தனைநாட்களாக மனநோய் உண்டு என்று கண்டுபிடிக்க முடியுமா?
நல்லகாலத்திற்கு அப்படியொன்றும் நடக்கவில்லை.

இதற்கிடையில் கட்டாரில் பணிப்பெண்ணாகக் கடமை புரிந்துவந்த 21 வயதான யுவதி ஒருவர் 'தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை' செய்துகொண்டதாகவும், அவரின் சடலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட இருப்பதாகவும் வீரகேசரி செய்தி வெளியிட்டிருக்கிறது.
காதல் தோல்வியினால் அவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்தார் என்று வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்திருப்பதாகவும் செய்தி தெரிவிக்கிறது.
இங்கிருந்து கட்டாருக்குச் சென்றுதான் காதல் தோல்விக்கு தற்கொலை செய்ய வேண்டுமா?
தற்கொலை செய்பவர் இங்கே செய்திருப்பாரே?
கட்டாரில் பணிப்பெண்ணாக பணிபுரியும்போது காதல் ஏற்பட்டதாக சொல்லலாம், ஆனால் பணிப்பெண் காதல்? நம்புதல்?
போங்கய்யா...
'ஏழைகளின் உயிர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவும் தான்.
அவர்கள் தமிழர்களாக இருந்தாலென்ன, பெரும்பான்மையினராக இருந்தாலென்ன, ஏனைய சமூகத்தவராக இருந்தாலென்ன...'


இந்தக் கொடுமையை நிறுத்துங்கள்:
யாழ்ப்பாணத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையத்தவறி சிறுமி ஒருத்தி தற்கொலைக்கு முயன்றதாக செய்தி தெரிவிக்கிறது.
இந்த சமூகம் 10 வயதுச் சிறுமி ஒருத்தியை தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு மாற்றியிருக்கிறது என்று நினைக்கும்போது இந்த சமூகத்தின் மீது வெறுப்பு ஏற்படுகிறது.
பலிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளைப் போல தரம் 3இலிருந்து தனியார் கல்விநிலையங்களுக்கு அனுப்பி அனுப்பி அவர்களின் இயற்கையான அறிவுத்திறனை மழுங்கடித்து, வெறுமனே புத்தகத்தை வாசித்து ஒப்பிக்கும் இயந்திரங்களாக மாற்றி இந்தப் பெற்றோரும், ஆசிரியர்களும், சமூகமும் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.
பெற்றோரின் தன்மானப் பிரச்சினையாக மாறிவிட்ட இந்தக் கொடுமைப் பிடித்த பரீட்சைக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
நான் இந்தப் பரீட்சை எடுக்கும்போதே இந்த தனியார் கல்விநிலையத்திற்கு அனுப்பி கொடுமைப்படுத்தும் செயற்பாடு தொடங்கிவிட்டாலும் இப்போது மிக மிக அதிகம்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கும், திறமைக்கும் சம்பந்தம் மிக மிகக் குறைவு என்று நான் சொல்வேன்.
ஏன் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையே அப்படித்தான் என்று சொல்வேன்.
இந்த வரட்டுக் கெளரவ, தன்மானப் பிரச்சினையாகக் கருதும் உணர்வைப் பெற்றோர் தூக்கி எறிந்துவிட்டு மாணவர்களை சாதாரணமாக தயார்படுத்தினாலே மாணவர்கள் இலகுவாக சித்தியடைவார்கள் என்பது என் கருத்து.


ஊடக(சு)தந்திரம்:
அண்மையில் வவுனியாவிற்குச் சென்றிருந்தேன்.
வேறு வேலைகள் எதுவும் இல்லாததால் தொலைக்காட்சி பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினேன்.
சக்தி தொலைக்காட்சி செய்திகளில் ஸ்ரீரங்கா கோஷம் தாங்க முடியவில்லை.
அவர் ஏன் முடிவுஎடுத்தார், யார் யாரையெல்லாம் கூப்பிட்டுவைச்சு முடிவு எடுத்தார், வந்தவங்கள் என்ன கருத்துச் சொன்னாங்கள் எண்டு விளக்கமா விபரணப்படம் மாதிரி செய்தியறிக்கையில காட்டுறாங்கள்.
அதோட அவர் பாராளுமன்றத்தில உரையாற்றிறது எண்டு சொல்லி 5 நிமிசம் காட்டுறாங்கள்.
உண்மையா அரசாங்கத்தையும், ஜனாபதியையும் ஊடக சுதந்திரம் பற்றி விமர்சிக்கும் இவர்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டாமா?
சுதந்திர ஊடக அமைப்புகள் என்பன அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதா?
நான் அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ காக்க முயற்சிக்கவில்லை, ஆனால் என் வீட்டிலுள்ள குப்பைகளை அகற்றியபின்னர்தான் அடுத்தவன் வீட்டு குப்பைகள் பற்றிக் கதைக்க எனக்கு உரிமையுண்டு என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
இவர்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டாமா?
அந்தச் செய்தியில் ஸ்ரீரங்கா வந்து 'ஏற்கனவே வெற்றிபெறுவது உறுதியாகிவிட்ட அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்ப்பதால் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை, அதனால் மக்களுக்காக நான் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறேன்' என்றார்.
ஸ்ரீரங்கா பற்றி ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும், எனக்கு ஒரு சந்தேகம்.
'அண்ணே! ஏற்கனவே வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டநிலையில் நீங்கள் அளிக்கிற வாக்கு அரசாங்கத்திற்கு எந்தவகையில் உதவப்போவதில்ல, வாக்களிப்பில தாக்கமே செலுத்தாத உங்கட வாக்குக்காக அரசாங்கம் மக்களுக்கு எப்பிடி உதவும் எண்டு சொல்லுறியள்?'
செத்த பாம்பை அடிப்பதற்கு எந்த ஊரிலும் பணம் கொடுக்கமாட்டார்கள், வென்றுவிட்ட அதை ஆதரிக்க மக்களுக்கு எதுவும் நடக்காதண்ணே.
உங்களுக்கு வேண்டுமெண்டா அமெரிக்க சொகுசுப் பிரயாணம், வசதிகள் எல்லாம் கிடைக்கும்.
'மலையக மக்களை உண்மையை அறியவிடாமல் மலையக அரசியல்வாதிகள் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்' எண்டு அடிக்கடி சொல்லுவியள், இப்ப நீங்கள் என்னண்ணே செய்யிறீங்கள்?


படம் காட்டுறேன்: