Sunday, October 17, 2010

இந்திய அவுஸ்ரேலியத் தொடர் - என் பார்வையில்.

இந்திய அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போர்டர் - கவாஸ்கர் ரெஸ்ற் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது.
இந்தியாவின் வெற்றி அல்லது ஆதிக்கத்தை கிறிக்கற் விமர்சகர்கள்(!) பொதுவாகவே எதிர்வுகூறியிருந்தாலும் 2-0 என்ற கணக்கு தரவுப் புத்தகத்தில் மோசமான ஒரு பெறுபேறாகவே அவுஸ்ரேலியாவுக்கு அமையும்.
2-0 என்ற அளவுக்கு இரண்டு போட்டிகளும் ஒருபக்கச்சார்பாக அமையாதபோதிலும் தேவையான நேரங்களில் இந்தியா சார்பாக ஒருவர் கதாநாயகத்தனம் புரிந்து இந்தியாவுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்கள்.
முதலாவது போட்டி மிக இறுக்கமான போட்டி என்றபோதிலும், வி.வி.எஸ்.லக்ஸ்மனின் கதாநாயகத்தனம் அவுஸ்ரேலியாவை வெற்றிக்கனியைப் பெறவிடாமல் தடுத்துக் கொண்டது.
முதற்போட்டியில் கடைசிநேரம் வரை யாரும் வெல்லலாம் என்ற விறுவிறுப்பு போட்டிக்கு அழகைக் கொடுத்தது.
வி.வி.எஸ்.லக்ஸ்மன் உடல் உபாதைக்கு நடுவிலும் அணிக்காக போட்டியை வென்று கொடுத்தார்.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தொடரிலும் மூன்றாவது போட்டியை இதே லக்ஸ்மன் தான் வென்றுகொடுத்திருந்தார்.

கடந்த 12 மாதங்களில் இந்தியா சார்பாக போட்டியின் 3 ஆவது அல்லது 4 ஆவது இனிங்க்ஸ் இல் அதிக ஓட்டங்கள் பெற்றவர்களில் லக்ஸ்மன் 5 இனிங்ஸ்களில் 4 ஆட்டமிழக்காத இனிங்க்ஸ்களொடு 365 ஓட்டங்களைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
எனினும் முதலிடத்தில் இருக்கும் சச்சின் ரெண்டுல்கர் 445 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றபோதிலும் அதற்கு 7 இனிங்க்ஸ்களை எடுத்திருக்கிறார், அவற்றில் இரண்டு ஆட்டமிழப்பற்ற இனிங்க்ஸ்கள்.

லக்ஸ்மன் கடைசியாக விளையாடிய 3 ஆவது அல்லது 4 ஆவது இனிங்க்ஸ்களில் அவர் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள்.
51*, 69*, 69, 103*, 73*

அந்த 103 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக கடந்த ஓகஸ்ற் மாதம் பெற்றுக்கொண்டது.
அவுஸ்ரேலியாவிற்கெதிராக லக்ஸ்மன் பெற்றுக்கொண்ட 73 ஓட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால் அவற்றைப்பெற லக்ஸ்மன் எடுத்துக்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை வெறுமனே 79 மாத்திரமே. அதாவது அடித்தாடும் வீதம் 92.40.

அவுஸ்ரேலியா சார்பாக முதல்போட்டியில் ஷேன் வொற்சன் முதல் இனிங்க்ஸ் இல் சதமும், இரண்டாம் இனிங்க்ஸ் இல் வேகமான அரைச்சதமொன்றையும் பெற்றார்.
முதல் இனிங்க்ஸ் இல் ஷேன் வொற்சனும், பொன்ரிங் உம் சிறந்த இணைப்பாட்டமொன்றைப் பெற்றுக்கொண்டிருந்தபோது (141 ஓட்டங்கள். 37.2 பந்துப்பரிமாற்றங்களில்) கவனக்குறைவால் பொன்ரிங் ரண் அவுட் ஆக, போட்டி மெதுவாக நகரத் தொடங்கியது.
பொன்ரிங் முதல் இனிங்க்ஸ் இல் மிகச்சிறப்பாகவே ஆடினார்.
அடுத்தவர் ரிம் பெய்ன். 92 ஓட்டங்களைப் பெற்றார். பந்து ரிவேர்ஸ் ஆகிக்கொண்டிருந்தபோது அருமையாக ஆடினார்.
ரிம் பெய்ன் பற்றி பின்னால் குறிப்பிடுகிறேன்.

இந்தியா சார்பாக முதல் இனிங்க்ஸ் இல் சச்சின் 98 ஓட்டங்களைப் பெற்று சதமொன்றைத் தவறவிட்டார்.
ரெய்னா 86 ஓட்டங்களைப் பெற்றார்.
அவுஸ்ரேலிய வீரர்கள் ரெய்னாவை தேவையானளவு பவுண்சர்கள் மூலம் ஆட்டமிழக்கச் செய்யவில்லை என்ற குறையும் தெரிவிக்கப்பட்டது.
மிற்சல் ஜோன்சன் 5 விக்கற்றுகளைப் கைப்பற்றியிருந்தார்.

இரண்டாம் இனிங்க்ஸ் இல் அவுஸ்ரேலியா மிக வேகமாக ஆடினாலும் இசாந்த் சர்மாவின் short and wide பந்தை pull செய்ய முனைந்து விக்கற்றுகள் சரிந்து அரைச்சதம் பெற்றிருந்த ஷேன் வொற்சன் ஆட்டமிழக்க எல்லாம் மாறியது.
அடுத்து வந்த பொன்ரிங் இசாந்த் சர்மாவின் இன்னொரு short பந்தை pull செய்ய முனைந்து backward square leg இல் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கிளார்க் இசாந்த் சர்மாவின் அற்புதமான பந்தொன்றிற்கு விக்கற் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க போட்டி முழுமையாக மாறியது.
பின்னர் அவுஸ்ரேலியர்களில் ஹசி மற்றும் மார்க்கஸ் நோர்த் இருவருக்கும் பிழையான/சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழப்பு வழங்கப்படவும் போட்டி முழுமையாக மாறியது.

216 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்தியா இம்முறை நடுவரின் மோசமான தீர்ப்பினால் கம்பீரை ஆரம்பத்திலேயே இழந்தது.
124 இற்கு 8 விக்கற்றுகளை இழந்து தடுமாறிய/தோல்வியை எதிர்கொள்ளத் தயாரான இந்தியாவை லக்ஸ்மனும், இசாந்த் சர்மாவும் வெற்றிப்படியேற்றினர்.
அவுஸ்ரேலியாவின் சார்பாக டக் பொலிஞ்சர் காயமடைந்தது பொன்ரிங் இற்கு இழப்பாக அமைந்தது.

எனினும் பொன்ரிங் இன் சில முடிவுகள் விமர்சிக்கப்பட்டன.
குறிப்பாக ஷேன் வொற்சன் வேளைக்கே பயன்படுத்தப்படாமை, மைக்கல் கிளார்க்கை, சைமன் கற்றிச்சை பயன்படுத்தாமலேயே விட்டமை குறிப்பிடத்தக்கன.
இந்திய ஆடுகளங்களில் முரளி, ஷேன் வோண் போன்ற தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களே தடுமாறியுள்ள நிலையில், விக்கற்றுக்கு விக்கற்றாக நேராக பந்துவீசும் கிளார்க் விக்கற்றுகளைக் கைப்பற்றக்கூடியவர் என்ற கருத்து உண்டு. அத்தோடு கிளார்க் ஒருமுறை 6 விக்கற்றுளை இந்தியாவில் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.
பொன்ரிங் இன் சில முடிவுகள் விமர்சிக்கப்படவேண்டியன என்றாலும், அணியின் தோல்விக்கான பொறுப்பு அவுஸ்ரேலிய மத்தியவரிசையைக்கும் உண்டு.
3ஆவது இனிங்க்ஸ் இல் தேவைக்கேற்ற ஓட்டங்களை, இன்னுமொரு 20,30 ஓட்டங்களே போட்டியை மாற்றியிருக்கலாம்.


இரண்டாவது போட்டி சற்று வித்தியாசமானது.
அவுஸ்ரேலியா ஓட்டங்களை முதல் இனிங்க்ஸ் இல் குவித்தது.
இந்தியா அவுஸ்ரேலியாவை விட நூற்றுக்கணக்கான ஓட்டங்கள் முன்னிலை பெறும் என்று பார்த்தால் ரெண்டுல்கர் இரட்டைச்சதம் பெற்றபின்னர் ஆட்டமிழந்த பின் தொடர்ந்து விக்கற்றுகளை இழந்து வெறுமனே 17 ஓட்டங்களால் முன்னிலைபெற அவுஸ்ரேலியாவோ அவர்களது இரண்டாம் இனிங்க்ஸ் இல் விக்கற்றுகளை தொடர்ந்து வெறுமனே 223 ஓட்டங்களைப் பெற, பெறவேண்டிய 206 ஓட்டங்களை இந்தியா தனது முதலாவது போட்டியில் விளையாடிய புஜாராவின் சிறப்பான ஆட்டத்தால் இலகுவாகவே வென்றது.

ரெண்டுல்கரின் 6ஆவது இரட்டைச்சதம் இந்தப் போட்டியின் தீர்மானிக்கும் புள்ளியாக அமைந்தது.
இத்தனை ஆண்டுகளின் பின்னரும் அதே வேட்கையுடன் ஆடிவரும் சச்சின் கடைசி 4 ரெஸ்ற் போட்டிகளில் பெறும் இரண்டாவது இரட்டைச்சதம் இதுவாகும்.
இதேவேளை பொன்ரிங் இரண்டாவது இனிங்க்ஸ் இல் தனித்து நின்று போராடி 72 ஓட்டங்களை எடுத்தார்.

இனித் தொடர்முழுக்க சில அம்சங்களைப் பார்த்தால்,

இந்தியா:

ஷகீர்கான்: ஷகீர்கானிற்கு இந்தத் தொடர் ஒரு கலவையான தொடராகவே அமைந்தது.
ஷகீர்கானால் புதிய பந்தைக்கொண்டு அவரது வழமையான ஸ்விங்கையோ அல்லது பெரியளவுக்கு ஆபத்தையோ விளைவிக்க முடியவில்லை.
ஆனால் பந்து றிவேர்ஸ் ஆகத் தொடங்கியவுடன் சில தருணங்களில் எதிர்கொள்ளமுடியாதளவுக்கு அற்புதமாகப் பந்துவீசினார்.
2 போட்டிகளில் 12 விக்கற்றுகள், 38.0 என்ற விக்கற் கைப்பற்றும் வீதம் என்பன மிகவும் சிறப்பானது என்றாலும் புதிய பந்துடனான தனது திறமை வெளிப்பாட்டை அதிகரிக்க விரும்புவார் என்பது எதிர்பார்ப்பு.

ஹர்பஜன்: 2 போட்டிகளில் 11 விக்கற்றுகள் என்பது உண்மையாகவே தரவுரீதியாக மிகச்சிறப்பானதாக இருந்தாலும், ஹர்பஜனும் சில தருணங்களில் ஆபத்தற்றவராக காணப்பட்டார்.
ஆனால் திடீரென எல்லாப் பலமும் கொண்டு முக்கிய விக்கற்றுகளை எல்லாம் கைப்பற்றினார்.
மோசமான இலங்கைத் தொடருக்குப்பின்னர் இது மிகப்பெரியளவில் முன்னேற்றம் என்றாலும் அணியின் முதல்நிலைப் பந்துவீச்சாளராக ஹர்பஜன் தன்னை முன்னேற்றிக்கொள்ள விரும்புவார் என்று நினைக்கிறேன்.

பிரக்ஜான் ஒஜா - கடந்த தொடரில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் என்று இவரை நான் குறிப்பிடுவேன்.
2 போட்டிகளில் 9 விக்கற்றுகள், 90.4 என்ற விக்கற் கைப்பற்றும் வீதம் என்பன வேறுகதை சொன்னாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு எந்தநேரமும் நெருக்கடி கொடுத்தவாறு பந்துவீசிக்கொண்டிருந்தார்.
கடந்த இலங்கைத் தொடரிலும் நன்றாகப் பந்துவீசினார்.
அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங்கை விட ஆபத்தானவராக காணப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து நன்றாகப் பராமரிப்பதிலும், இடதுகைத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிறப்பாக பந்துவீசுவதிலும் இவரது எதிர்காலம் தங்கியிருக்கிறது.
இந்தத் தொடருக்கு முன், 17 வலதுகைத் துடுப்பாட்ட வீரர்களையும், நான்கே நான்கு இடதுகைத் துடுப்பாட்ட வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.
இத்தொடரில் 4 இடதுகைத் துடுப்பாட்ட வீரர்களின் விக்கற்றுகளைக் கைப்பற்றியிருந்தாலும், பொலிஞ்சர், ஜோன்சன் ஆகியோரின் விக்கற்றுகளைத் தவிர்த்துப் பார்த்தால், ஹசியின் பிழையான ஆட்டமிழப்பு வழங்கலையும் தவிர்த்தால் கற்றிச்சின் விக்கற்றை மட்டுமே கைப்பற்றியிருக்கிறார்.
இனி இடதுகைத் துடுப்பாட்ட வீரர்களுக்கு எப்படிப் பந்துவீசுகிறார் என்பதில் இவரது நீண்ட எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
ஆனால் தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காட்டிவருவதால் இந்தியா எதிர்காலத்தில் நம்பியிருக்கக்கூடியவராக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.

இசாந்த் சர்மா: பந்துவீச்சில் பலவழிகளில் முன்னேற இடமுண்டு.
நன்றாகத் துடுப்பெடுத்தாடுகிறார்.
ஆனால் பந்துவீச்சு பழைய மாதிரியே இருக்கிறது.

ஸ்ரீசாந்த்: இரண்டாவது போட்டியில் விளையாடினாலும், இசாந்த் சர்மா முழு உடற்தகுதி அடையும்போது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று நம்புகிறேன்.
பெரியளவில் ஆபத்தை விளைவிப்பது போன்று வீசவில்லை, ஆனால் படுமோசமாகவும் இருக்கவில்லை.

செவாக் - மிற்சல் ஜோன்சன் இவர் short ball களுக்கு சந்தேகத்திற்குரியவர் என்று  பகிரங்கமாக அறிவித்த பின்னர் விளையாடிய 4 இனிங்க்ஸ்களிலும் short ball களுக்கே ஆட்டமிழந்திருக்கிறார்.
உடலை நோக்கி இனி இவர் மீது வேகப்பந்துவீச்சு பவுண்சர்கள் வீசப்படும் என்று நினைக்கிறேன்.
செவாக் இனி விளையாடப்போகும் ரெஸ்ற் போட்டிகளை அவதானிக்க விரும்புகிறேன்.
இந்தியா சார்பாக அவர்களுக்கு ஏமாற்றமளித்தவராக செவாக்கை கருதலாம்.

கம்பீர்: இந்தியாவின் அடுத்த ஏமாற்றம். ஒரு இனிங்க்ஸ் இல் தவறாக ஆட்டமிழப்பு வழங்கப்பட்டிருந்தாலும் உள்நோக்கிவரும் வேகப்பந்து வீச்சுக்களை சமாளிக்க அண்மைக்காலத்தில் கம்பீர் தடுமாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
இலங்கைத் தொடரில் மலிங்கவின் பந்துவீச்சைச் சமாளிக்க தடுமாறினார், இங்கும் இரண்டு "ஆட்டமிழப்புகளிலும்" LBW முறையிலேயே "ஆட்டமிழந்தார்".
உடற்தகுதியிலும் அண்மைக்காலமாக தடுமாறுகிறார்.
மறுபுறத்தில் முரளி விஜய் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருப்பதால், உடனடியாக அணியில் இடத்திற்கு ஆபத்து ஏதும் வராது என்றாலும் எதிர்காலத்தில் தொடர்ந்து சறுக்கினால் அழுத்தங்கள் அதிகரிக்கலாம்.


ட்ராவிட்: இந்தியாவின் அடுத்த ஏமாற்றம்.
ஆனால் பெரியளவுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.
அண்மைக்காலமாகவே ட்ராவிட் தடுமாறிவருகிறார்.
outside offstump பந்துகளை காலை அசைக்காமல் விக்கற் காப்பாளரிடமோ, சிலிப்ஸ் இடமோ பிடிகொடுத்து ஆட்டமிழப்பு வழக்கமாகிவருகிறது.
புஜாராவின் எழுச்சி நிச்சயமாக அழுத்தத்தை வழங்கும்.


சச்சின்: எல்லோரும் செவாக்கை தொடரை தீர்மானிப்பவராக யோசித்திருந்த நிலையில் யார் உண்மையில் முதல்வன் என்பதை நிரூபித்திருக்கிறார்.
எப்போதும்போலவே அழகாகவே ஆடினார்.
2002ம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 22ம் திகதிக்குப் பின்னர் (இங்கிலாந்துத் தொடர் என்று நினைக்கிறேன்) முதன்முறையாக ரெஸ்ற் தரவரிசைப்பட்டியலில் முதல்நிலைத் துடுப்பாட்டவீரராக மாறியிருக்கிறார்.
தொடரை இந்தியா பக்கம் திருப்பியதில் முக்கிய காரணம் இவர்.


லக்ஸ்மன்: விளையாடிய ஒரு போட்டியில் 4ஆவது இனிங்க்ஸ் இல் ஆடிய ஆட்டமென்ன...
ஏற்கனவே மேலே இவர் பற்றி குறிப்பிட்டுவிட்டேன்.


ரெய்னா: ஒரு இனிங்க்ஸ் இல் 86, பின்னர் எதிர்பார்த்தளவு ஓட்டங்களைப் பெறவில்லை.
பவுண்சர்/short pitch பந்துகளுக்கு இன்னும் தடுமாறுகிறார்.
இந்திய ஆடுகளங்களிலேயே தடுமாறினால் இந்தியாவின் எதிர்காலத் திட்டங்களில் யுவ்ராஜ் இற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
யுவ்ராஜ் இரட்டைச்சதம் அடித்த சூட்டோடு சூடாக இருக்கிறார்.
86 ஓட்டங்களைப் பெற்ற இனிங்க்ஸ் இல் அழகாக ஆடினார்.


டோணி: சொல்லும்படியாக துடுப்பாட்டத்தில் மிளிரவில்லை.
ஆரம்பத்தில் இரண்டு, மூன்று பிடிகளை/ஆட்டமிழப்பு வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தார் விக்கற் காப்பாளராக.
பின்னர் பிழைகளின்றி காப்பில் ஈடுபட்டார்.
அணித்தலைவராக சொல்லும்படியாக சுரேஷ் ரெய்னாவை பந்துவீச அழைத்து றிக்கி பொன்ரிங்கின் விக்கற்றை எடுத்தமையைக் குறிப்பிடலாம்.


புஜாரா - இரண்டாவது போட்டியில் 4ஆவது இனிங்க்ஸ் இல் அற்புதமாக ஆடினார்.
இந்தியாவிற்கு நல்லதொரு எதிர்காலம் உள்ள வீரரொருவர் கிடைத்திருக்கிறார்.
தன்னம்பிக்கையுடன் ஆடுகிறார்.
எதிர்காலத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டால் எதிர்கால நட்சத்திரமாக வளரலாம்.
short pitch பந்துகளை தடுமாற்றங்களின்றி எதிர்கொள்கிறார்.
அற்புதமாக drive செய்கிறார். ஒரு சில drive கள் மிக மிக அற்புதம்.
கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்து அணியில் கஷ்ரப்பட்டு இடத்தைப்பெற்றிருப்பதால் அவ்வளவு இலகுவாக தன் இடத்தை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார், ஆகவே இந்தியாவிற்கு நல்லதோர் துடுப்பாட்ட வீரர் கிடைத்தாயிற்று.


அவுஸ்ரேலியா:

வொற்சன்: துடுப்பாட்டத்தில் கலக்கினார். அவுஸ்ரேலியாவி இந்தத் தொடரின் வீரர், துடுப்பாட்ட வீரர்.
என்றாலும் பெறும் அரைச்சதங்களை சதங்களாகவும், சதங்களை மிகப்பெரும் சதங்களாகவும் மாற்ற விரும்புவார் என்று நினைக்கிறேன்.
ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக நன்றாகச் செயற்படுகிறார்.

கற்றிச்: அவுஸ்ரேலியாவின் ஏமாற்றங்களில் ஒருவர்.
வழமையாக நீண்ட இனிங்க்ஸ்களை ஆடும் இவர் ஏனோ ஏமாற்றமளித்தார்.


பொன்ரிங்: பலர் எதிர்பார்த்திராதளவுக்கு சிறப்பாக ஆடினார்.
எனினும் 70களை சதங்களாக மாற்ற விரும்பியிருப்பார்.
அழுத்தங்கள் நடுவே சிறப்பாக துடுப்பாட்ட வீரராகச் செயற்பட்டார்.
கடந்தகால இந்திய மண்ணில் தடுமாறியபோதிலும், இம்முறை ஓரளவு சிறப்பாக ஆடினார்.

எனினும், ஊடகங்கள் கட்டியமைத்துவைத்திருந்தளவிற்கு பொன்ரிங் மோசமான form இல் இருந்திருக்கவில்லை என்பது என் கருத்து.
பொன்ரிங்கையும், சச்சினையும் ஒப்பிட்டு அண்மைக்கால form களை ஒப்பிட்டவர்கள் தங்கள் முறைகளில் இருந்த தவறுகளைக் கண்டுகொள்ளவில்லை.

பொன்ரிங் ரெஸ்ற் அணிகளில் தற்போதைய நிலையில் உலகின் மிகச்சிறந்த இரண்டு பந்துவீச்சு அணிகளைக்கொண்ட அணிகளுக்கெதிராக பந்துவீச்சுக்குச் சாதமான ஆடுகளங்களில் ஆட, சச்சினோ துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளங்களில் ஆடினார். இலங்கையின் பந்துவீச்சு அந்தளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கவில்லை.
முரளி விளையாடிய காலிப் போட்டியில் வேளைக்கே ஆட்டமிழந்தார்.
(மேற்கிந்தியத்தீவுகளுத்கெதிராக ஆடும்போது கேமர் றோச் வீசிய பந்து பொன்ரிங் இன் கையைத் தாக்கியதும், அத்தொடர் முழுதும் றோச் பொன்ரிங் இற்கு சிறப்பாகவே பந்துவீசியதும் குறிப்பிடத்தக்கது)

பொன்ரிங் இன் மோசமான form ஐக் காட்ட பாகிஸ்தானிற்கெதிராக மொகமட் ஆமிர் பிடியொன்றைத் தவறவிட்ட பின்னர்தான் இரட்டைச்சதமொன்றைப் பெற்றார் எனவே அதைத் தவிர்த்துவிட்டுக் கணிப்போம் என்றவர்கள், சச்சின் இரட்டைச்சதமடித்த இலங்கைப் போட்டியில் அவரது பிடி தவறவிடப்பட்டதையும், 3 ஆவது போட்டியிலும் அவரது பிடியை டில்ஷான் தவறவிட்டதையும் குறிப்பிடவில்லை.

ஆக, இது ஊடகங்களால் கட்டியெழுப்பப்பட்ட மாயையான விடயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால்,
பொன்ரிங் form அவரது வழமையான அளவிற்கு இருக்கவில்லை என்பதுவும், சச்சின் top form இல் இருந்தார் என்பதுவும் உண்மை, ஆனால் பத்திகளில் சொல்லப்பட்டளவுக்கு பொன்ரிங் மோசமான form இல் இருக்கவில்லை என்பது என் கருத்து.
அதனால் நான் பொன்ரிங் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.


கிளார்க்: அவுஸ்ரேலியாவின் மாபெரும் ஏமாற்றம்.
அவுஸ்ரேலியாவின் சுழற்பந்துவீச்சுக்கெதிரான சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன, ஆனால் மோசமாக துடுப்பெடுத்தாடினார்.
லாரா பிங்கிள் உடனான உறவு முறிவுக்குப் பின்னர் கிளார்க் விளையாடிய 6 ரெஸ்ற் போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்டிருப்பது வெறுமனே 433 ஓட்டங்கள்.
அதில் 168 ஓட்டங்கள் லாரா பிங்கிள் உடனான முறிவுக்குப் பின்னர் திரும்பிய உடன் பெற்றது.
அதைத் தவிர்த்துப் பார்த்தால் 10 இனிங்க்ஸ்களில் 265 ஓட்டங்கள்.
சராசரி 26.5... 2 அரைச்சதங்கள் மட்டும்.
அந்தப் போட்டியைத் தவிர்த்தால், 10 இனிங்க்ஸ்களில் சந்தித்தது வெறுமனே 499 பந்துகள்.
அதாவது ஒரு இனிங்க்ஸ் இல் வெறுமனே 49.9 பந்துகள்.
பெற்றிருக்கும் நான்கு ஓட்டங்கள் 35.
அதாவது ஒரு இனிங்க்ஸ் இல் வெறுமனே 3.5 நான்கு ஓட்டங்கள்.
அதிகபட்சமாக பெற்றது 77 ஓட்டங்கள்.
ஹிம்ம்ம்......


ஹசி - அடுத்த ஏமாற்றம்.
இரண்டு பிழையான தீர்ப்புகள் ஹசிக்கு எதிராக இருந்தாலும், ஏனோ ஹசி பழைய அளவில் சிறப்பாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு இருபது மனநிலையிலிருந்து, இந்திய ஆடுகளங்களிற்கு உடனடியாக மாறமுடியாத பிரச்சினையாக இருந்திருக்கலாம்.
ஆனால் சிரேஷ்ர வீரராக ஹசியின் பங்களிப்பு போதாமையாகவே இருந்தது.


நோர்த்: ஒரு தவறான தீர்ப்பு. ஒரு அருமையான சதம்.
ஒருமுறை ஷகீர்கானின் றிவேர்ஸ் ஸ்விங் இன் இலக்கு.
வழமையான நோர்த் பாணியில் ஆடியிருந்தார்.
பெற்றால் அதிக ஓட்டங்கள், இல்லாவிட்டால் விரைவில் ஆட்டமிழத்தல்.
தனது தொடர்ச்சியாக ஓட்டக்குவிப்பை வெளிப்படுத்தும் ஆற்றலை வளர்க்க வேண்டிய தேவையில் இருக்கிறார்.

ரிம் பெய்ன்: அவுஸ்ரேலியா தோற்கும் கணங்களில் கூட அவர்களின் திறமைகளை இரசிக்க வைப்பது அவர்களின் தனித்திறமை.
நாட்டின் முதல்நிலை விக்கற் காப்பாளர் காயமடைந்திருக்க, அவருக்குப் பதில் தற்காலிக விக்கற் காப்புப் பணியில் வந்திருக்கும் இந்த இளைய வீரர் எதிர்கால அவுஸ்ரேலியாவை தூக்கிநிறுத்தப்போகும் விக்கற் காப்பாளராக வர அத்தனை தகுதிகளும் உண்டு.
வொற்சன், பொன்ரிங் இற்குப் பிறகு இத்தொடரில் அவுஸ்ரேலியா சார்பாக சிறந்த துடுப்பாட்ட வீரர் இவர்தான்.
பந்து றிவேர்ஸ் ஸ்வி்ங் ஆகும்போதோ அல்லது சுழலும்போதோ பந்தை நன்றாகப் பிந்தி உடலுக்குக் கிட்டவரவிட்ட பின் ஆடுகிறார், கால்களை நன்றாக நகர்த்தி ஆடுகிறார், நல்ல மனநிலையுடன் ஆடுகிறார், விக்கற் காப்பில் குறைசொல்லுமளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை...
எதிர்காலத்திற்குரிய வீரர் இவர்.
ஏற்கனவே இங்கிலாந்திலும் கவனித்திருந்தேன், நல்ல துடுப்பாட்ட வீரராக வர வாய்ப்புள்ளவர்.
ஆஷஷ் தொடரில் ஹடின் விளையாடவே வாய்ப்புகள் மிகுதியாக உண்டெனினும், ரிம் பெய்ன் என்ற இளம் வீரருக்கு வாய்ப்புக் கிடைத்தால் அதை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை அறியக் காத்திருக்கிறேன்.

நேதன் ஹொரிட்ஸ்: இந்தியாவில் வெளிநாட்டுச் சுழற்பந்துவீச்சாளர்களின் சாபம் தொடர்கிறது.
அண்மைக்காலமாக நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்திவந்த ஹொரிட்ஸ் நன்றாக அடிவாங்கிக் கொண்டார்.
பெரியளவுக்கு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தது என்றாலும், எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே பந்துவீசினார்.
இவரின் எதிர்காலத்தை ஸ்மித் இன் முன்னேற்றமும், ஆஷஷில் இவரது பெறுபேறுகளும் தீர்மானிக்கும் என்று கருதலாம்.


மிற்சல் ஜோன்சன்: வழமையான ஜோன்சன் பாணிப் பெறுபேறுகள்.
மழித்தால் மீசை இல்லை, தாடி போன்று ஒன்றில் அற்புதமாக வீசுகிறார், இல்லை outside off stump இல் நன்றாகத் தள்ளி வீசுகிறார்.
எனினும் இங்கிலாந்து அளவிற்கு மோசமாக வீசாததும், முதற்போட்டியில் 5 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருந்ததும் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்திருக்கும்.


ஹில்பன்ஹோஸ்: கடந்த தொடரில் அவுஸ்ரேலியாவின் சிறந்த பந்துவீச்சாளர்.
தரவு ரீதியாக இது காட்டப்படாவிட்டாலும், தொடர்ச்சியாக அரமையாகப் பந்துவீசினார், துடுப்பாட்ட வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கினார்.
எல்லாவற்றையும்விட accuracy சிறப்பாக இருந்தது.
outswingers ஓடு சேர்த்து சிறிதளவிற்காவது உள்வரக்கூடிய inswingers ஐ வீசத் தொடங்கினால் இன்னும் ஏராளமான விக்கற்றுகளை வீழ்த்த நல்ல வாய்ப்புகள் உள்ளன.


டக் பொலிஞ்சர்: நன்றாகப் பந்துவீசினார்.
முதற்போட்டியில் ஏற்பட்ட காயம் அணியைப் பாதித்ததோடு இரண்டாவது போட்டியில் வெற்றிடம் தெரிந்தது.


இந்தியா: நட்சத்திரங்கள் தூக்கிச்சுமந்தார்கள், நட்சத்திரங்கள் பெற்றுக்கொடுத்தவெற்றி.

அவுஸ்ரேலியா: நட்சத்திரங்கள் சிலர் கைவிட்டார்கள். தோல்வி கிடைத்தது.

பி.கு:
1.எனக்கு ICC தரவரிசைகள் மீது நம்பிக்கை அல்லது ஏற்றுக்கொள்ளும் தன்மை கிடையாது.
அதைப் பெரிதாக கணக்கெடுப்பதும் கிடையாது. அதனால் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

2. இன்று ஒருநாள் தொடர் ஆரம்பிப்பதால் அதற்கு முன் பதிவிடவேண்டும் என்பதால் அவசரமாக எழுதிய பதிவு.
எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகளைகள் ஏதும் இருக்கலாம்.