Friday, January 14, 2011

கொலைக்காற்று - 07

நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.

இதற்கு முன்னைய பகுதிகளை,
தரங்கத்திலும்,
எரியாத சுவடிகளிலும்,
சதீஷ் இன் பார்வையிலும்,
நா இலும்,
லோஷனின் களத்திலும்,
என் பார்வையிலும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இது 07ஆவது பகுதி, என் பார்வையிலிருந்து தொடர்கிறது.


தனது பையிலிருந்து எடுத்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தவாறே சம்பவங்களை அலசத் தொடங்கினார் அந்த சிஐடி. ஜெனி யாராலும் ஏமாற்றப்பட்டாளா என்பதையும், அப்படி ஏமாற்றப்பட்டிருந்தால் அதைச் செய்தது சூரியபிரகாசா அல்லது வெறுமனே ஜெனி ஏமாற்றப்பட்டதை அறிந்து அதற்குள் சேகரை சிக்க வைக்க சூரியபிரகாஸ் முயன்றானா என்பதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.
இத்தனையையும் அடிவாங்கி இரத்த வழிய மயங்கிக் கிடக்கும் சூரியபிரகாஸ் நினைத்தால் தீர்த்துவைக்க முடியும், ஆனால் அவனே காவல்துறை அதிகாரி என்பதால் முரண்டுபிடித்துக்கொண்டிருக்கிறானே என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஏதோ நினைத்தவராக தன் அலைபேசியால் யாருக்கோ அழைப்பெடுத்து தன்னை அறிமுகப்படுத்திவிட்டு "உங்களிடம் சில சம்பவங்கள் பற்றி அறிய விரும்புகிறேன். இருவரையும் உங்கள் வீட்டில் இன்னும் 10 நிமிடத்தில் சந்திக்கிறேன்" என்று கொஞ்சம் அதிகாரமான குரலிலேயே சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
கெளதமின் தொடர்மாடிக்கு முன்னால் காவல்துறை வாகனம் நின்றது, தொடர்மாடியின் கீழ்த்தளத்தில் நின்றவர்கள் அதிர்ச்சியாகப் பார்க்க "Sir, IC தாங்கோ" என்று கேட்ட தொடர்மாடி பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பார்த்து முறைத்துவிட்டுச் செல்ல பின்னால் வந்த உதவியாளர் "யோவ், அவர் சிஐடி. உன் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையா?" என்று கேட்டுவிட்டுச் சென்றான்.

அழைப்பு மணியை அடித்ததும் பதற்றத்துடன் அதிகாரியை எதிர்பார்த்திருந்த கெளதம், வர்ஷா தம்பதியினர் கதவைத் திறந்தனர்.
"Look, உங்களிடம் மரியாதையாகச் செயற்பட விரும்புகிறேன். என்னிடம் எல்லா விடயங்களையும் வெளிப்படையாகக் கதைத்தால் எனக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது. இல்லை மறைக்கப் போகிறீர்கள் என்றால் என்னை விட உங்களுக்கு அதிகமாகக் கூடாது." அன்போ, அதட்டலோ, எச்சரிக்கையோ என்று புரியாத ஒரு தொனியில் ஆரம்பித்தார் சிஐடி.
கேட்ட கேள்விகளுக்கு ஓரளவுக்கு தெளிவாகவே விடயங்கள் கிடைத்தது. ஜெனி விவகாரத்தைப் பற்றிக் கேட்கும்போது இலண்டனில் இணைந்து வாழ்ந்ததைப் பற்றிக் கேட்கும்போது மட்டும் கெளதம் சிறிது தடுமாறினான், வர்ஷா குழப்பத்துடன் நோக்கினாள்.
"கெளதம், வீட்டில் நீங்களா உங்கள் மனைவியா தேநீர் தயாரிப்பது?" சாதாரணமாகக் கேட்டார் அதிகாரி.
"வழமையாக மனைவி தான்". பதில் கிடைத்தது.
"இன்று ஒரு மாறுதலுக்காக ஏன் நீங்கள் தேநீர் தயாரிக்க்கூடாது?" போய்த் தேநீர் கொண்டுவா என்று சொல்வதைப் போன்ற தொனியில் சொன்னதைப் புரிந்துகொண்ட கெளதம் சமையலறைக்குச் சென்றான்.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அதிகாரி,
"Mrs.Goutham, விதுரன் பற்றியும் உங்கள் பற்றியும் சில சம்பவங்களை கண்டுபிடித்தோம். விதுரனை நீங்கள் கொல்லவில்லை என்பதை ஓரளவுக்கு முடிவாக்கியிருக்கிறோம் என்றாலும், உங்கள் மீது சில சந்தேகங்கள் உள்ளன. விதுரனைச் சுட்ட அறையில் இரண்டு வகையான துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன. விதுரனின் உடலில் கிடந்தவை வேறு ஒருவகை, அவனது உடமைகளைச் சேதப்படுத்தியது இன்னொரு வகை. அவனது உடமைகளைச் சேதப்படுத்தியது மிகவும் எளிய வகையானது. உங்கள் வீட்டைச் சோதனையிடுவதா அல்லது நீங்களாக என்னிடம் சம்பவங்களைச் சொல்கிறீர்களா?"
வர்ஷாவின் உடல் நடுங்கியது, கண்கள் கலங்கின.
"நா.... நா... நான் இங்க சொல்றதா? நா..." தடுமாறினாள்.
"அந்தத் துப்பாக்கியை எடுத்து வாருங்கள்" படுசாதாரணமாக அதிகாரி சொல்லவும் தேநீர்க் கோப்பைகளோடு கெளதம் வரவும் சரியாக இருந்தது.
எடுத்து வா என்றவாறு கண்களால் கட்டளையிட்டார் அதிகாரி. வர்ஷா எழுந்து சென்று துப்பாக்கியோடு வர, கெளதம் குழப்பத்தோடும் பயத்தோடும், பின்னர் கோபத்தோடும் வர்ஷாவைப் பார்த்தான்.
"Hello, hello... உங்கள் மனைவி எதையும் சொல்லவில்லை, நானாகத்தான் கண்டுபிடித்தேன். மென்பொருள் பொறியிலாளருக்கும் துப்பாக்கிக்கும் என்ன சம்பந்தம்? காவல்துறை நிலையத்தில் இருக்க வேண்டியவர் நீங்கள். அதைப் பற்றி எனக்குத் தேவையில்லை, எனக்கு இந்த வழக்கு விரைவில் முடிக்கப்படவேண்டும். அதுவரை நீங்கள் சாதாரணமாக வெளியில் சுற்ற வேண்டும்." படபடவென சொல்லி முடித்தார் அதிகாரி.

கையைப் பிசைந்துகொண்டிருந்தான் கெளதம், கொஞ்சம் தெளிவாக இருப்பதாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்தாள் வர்ஷா. அதிகாரி வீட்டை ஒருமுறை வடிவாக நோட்டம் விட்டார். பின்னர் இருவரையும் பார்த்து ஒரு போலிச்சிரிப்பு சிரித்துவிட்டு எழுந்து வெளியே செல்ல முயற்சித்தவர்திடீரென நிலத்தில் குப்புறப் படுத்தார். தோட்டா ஒன்று விர்ர்ர்றென்று பாய்ந்து சென்றது. அதுவரை வெளியே நின்ற உதவியாளர்கள் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிகளை வர்ஷா மற்றும் கெளதம் மீது நீட்ட, சைகையால் "இவர்களில்லை. பின்புறத்தால் தான் சுட்டார்கள்" என்று சொன்னார் அதிகாரி.
உதவியாளர்கள் வீட்டுக்குப் பின்புறமாக ஓடிச் சென்றார்கள்.
"ஒன்றும் யோசிக்க வேண்டாம். மாறுவேடத்தில் காவல்துறையினரை இந்தத் தொடர்மாடியில் நிற்க ஏற்பாடு செய்கிறேன். போய்ற்று திரும்பவும் வருவன்." சொல்லிவிட்டுக் கிளம்பினார் அந்த அதிகாரி.

கொஞ்சம் மகிழ்வாகவே தனது அலுவலகம் திரும்பிய சிஐடி அதிகாரி, அங்கிருந்த தனது உதவியாளரிடம் "சூரியபிரகாசுக்கு என்ன நடந்தது? எழும்பீற்றானா?" கேட்டவாறு கதிரையில் அமர்ந்தார். "அவர்... ஸ்ஸ்... அவன் எழும்பீற்றான், ஆனா ஒண்டும் கதைக்க மாட்டன் எண்டு அடம்பிடிக்கிறான்" தன்னை விட உயர்பதவியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியை அவன் என்றழைக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட உதவியாளர் நிலைமையை விளக்கினான். உதவியாளரைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு சூரியப்பிரகாசை நோக்கி நடக்கத் தொடங்கினார் அதிகாரி.
தனது பிரத்தியேக மடிக்கணணியையும் கொண்டு சூரியபிரகாசிடம் சென்றவர் கணணியை நீட்டி "உன் sooryaprakashthepolice@gmail.com என்ற கணக்கிற்குள் உள்நுழை" என்றான். சூரியபிரகாஷ் மறுத்தான். அதிகாரி சிரித்தவாறே password recovery option இல் சென்று recovery code ஐ அலைபேசிக்கு அனுப்பும் கட்டளையைக் கொடுத்து சூரியபிரகாசிடமிருந்து கைப்பற்றப்பட்ட அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அதிர்ஷ்ரவசமாக தனது ஜிமெயில் கணக்குடன் தனது அலைபேசியை சூரியபிரகாஷ் இணைத்து வைத்திருந்ததால் அதன்மூலம் சூரியபிரகாசின் ஜிமெயில் கடவுச்சொல்லை மாற்றி உள்நுழைந்தார். எதுவும் யோசிக்காமல் search mail இல் "vithuran" என்று தட்டினார்.
சூரியப்பிரகாசைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.


இறுதிப்பகுதியை எனது குரு வந்தியத்தேவன் தொடர்வார்.

12 பின்னூட்டங்கள்:

ஆதிரை said...

அசத்தல்....

இறுதிப்பகுதிக்காக காத்திருக்கிறேன்.

Subankan said...

கலக்கல்....


இறுதிப்பகுதிக்காக காத்திருக்கிறேன்.

LOSHAN said...

சூப்பர்..
கண்டபடி குழப்பாமல் நேரடியாக வேகமாகத் தொடர்ந்திருப்பது அருமை.
செம சூடு.. இறுதிப் பகுதியை இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்.

பி.கு - அனலிஸ்ட் அனலிச்டாகக் கலக்கி இருக்கிறார் ;)
password recovery - lol

வந்தியத்தேவன் said...

வாவ் கலக்கல்
முடிச்சுகளை எப்படி அவிழ்க்கப்போகின்றேன் என்பது தான் சிக்கலாக இருக்கின்றது.

கங்கோனின் அவதானிப்புகள் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றது.

1.
//"Sir, IC தாங்கோ" என்று கேட்ட தொடர்மாடி பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பார்த்து முறைத்துவிட்டுச் செல்ல பின்னால் வந்த உதவியாளர் "யோவ், அவர் சிஐடி. உன் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையா?" என்று கேட்டுவிட்டுச் சென்றான்.//

அடிக்கடி வெள்ளவத்தை தொடர்மாடிகளில் நடக்கும் நிகழ்வு,

2.
//"அவர்... ஸ்ஸ்... அவன் எழும்பீற்றான், ஆனா ஒண்டும் கதைக்க மாட்டன் எண்டு அடம்பிடிக்கிறான்" தன்னை விட உயர்பதவியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியை அவன் என்றழைக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட உதவியாளர் நிலைமையை விளக்கினான்//

இதுவும் அடிக்கடி நடக்கும் விடயம் ஒருவிதமான மனவியல் பிரள்வு

3.
பாஸ்வேர்ட் ரிக்கவரி எல்லாம் கலக்கல்.

Bavan said...

அசத்தல்..:)
கன்கொன் ஐம் ரியலி புரௌட் ஒஃப் யு..:P

அடுத்த பகுதிக்காக வெயிட்டிங், சிஷ்யனே இப்பிடியெண்டா குருவின் பகுதி எப்பிடி இருக்கும்.
வந்தியண்ணாவின் பகுதிக்கு காத்திருக்கிறேன்..:D

மைந்தன் சிவா said...

கதையில் கன்கோன் எண்டதால கொஞ்சம் IT அதிகமாவே ஜூஸ் ஆகி இருக்கு ஹிஹி வாழ்த்துக்கள்

“நிலவின்” ஜனகன் said...

அருமை-கலக்கல்-அட்டகாசம்-சூப்பர்...


தளர்வடைய செய்யாமல் கதையை கொண்டு சென்றமை பாராட்டுக்குரியது....

இறுதி பகுதி...எதிர்பார்ப்புடன்...

குருவே சிஸ்யன் பெயரை கெடுக்கமாட்டீங்க தானே...!! :D

நிரூசா said...

வாழ்த்துக்கள் தோழரே; குழப்பங்கள் பலவற்றை மிக இலகுவாக தீர்த்துவிட்டீர்கள். அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...

SShathiesh-சதீஷ். said...

முதலில் இப்படிப்பட்ட ஒரு கதையை தாமதமாக தந்த உங்களுக்கு கண்டனங்கள். அடுத்து உங்கள் கதையில் வந்த வசனகங்கள் பிரயோகங்கள் மிக ரசித்தேன். என் மன ஓட்டத்தில் இருந்தவர் கொலை காரராக வரும் வாய்ப்பு இருப்பது போல கதை செல்கின்றது. மாம்ஸ்க்காய் வெயிட்டிங்.

ம.தி.சுதா said...

செம சூடாயிருக்கே அடுத்ததுக்காய் வெயிட்டிங்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

Shafna said...

நல்லம் நல்லம்...இறுதிப் பகுதியை பெரி(ய)தாக எதிர்பார்க்கிறேன்.திருப்பம் ரசிக்க வைத்தது..

யோ வொய்ஸ் (யோகா) said...

அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன், கலக்கீட்டீங்க கோபி