Saturday, January 29, 2011

பாகிஸ்தானின் "தல" யார்?

குழப்பங்களுக்குப் பெயர்போன பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அண்மையில் இன்னுமொரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது ஒன்றும் அதிசயமானதல்ல.
உலகக்கிண்ண அணிக்கான அணியை அறிவித்துவிட்டு அதற்கான தலைவரை அறிவிக்காமல் விட்டிருக்கிறார்கள் பாகிஸ்தானின் தேர்வாளர்கள், கிரிக்கெட் சபையினர்.

நியூசிலாந்துக்கான சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு அங்கு ரெஸ்ற், இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ரெஸ்ற் தொடரில் மிஸ்பா உல் ஹக்கின் தலைமையில் வெற்றிபெற்றது அணித்தலைவரை அறிவிக்காமல் விடுவதற்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்திருக்கும்.

அத்தோடு மிஸ்பா உல் ஹக் ஒரு ராசியான அணித்தலைவர் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நினைத்திருக்கலாம்.
கராச்சியில் இடம்பெற்ற ஆசியக்கிண்ணப் போட்டி ஒன்றில் ஏற்கனவே மிஸ்பா உல் ஹக் தலைமை தாங்கியிருக்கிறார். இந்தியாவுக்கெதிரான அந்தப்போட்டியில் இந்தியா விதித்த 309 ஓட்டங்களை மிக இலகுவாக 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 45.3 பந்துப்பரிமாற்றங்களில் அடைந்தது. யுனிஸ்கானின் 123 ஓட்டங்கள் அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும், 2 விக்கெட்டுகளை இழந்த பின்னர் களமிறங்கிய மிஸ்பா உல் ஹக் வேகமாகப் பெற்ற 70 ஓட்டங்களும் முக்கியமானவை.
அதைத்தவிர இருபதுக்கு இருபது போட்டியொன்றிலும் தலைமை தாங்கி அதிலும் வெற்றிபெற்றுக்கொடுத்திருக்கிறார் மிஸ்பா.
அவுஸ்ரேலியாவுக்கெதிரான அந்தப்போட்டியிலும் பாகிஸ்தான் இலகுவாக வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது. 7 விக்கெட்டுகளாலும், 22 பந்துகள் மீதமிருக்கவும் வெற்றிபெற்றுக் கொண்டார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க சுவாரசியமான விடயம், மிஸ்பான தலைமை தாங்கிய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் பாகிஸ்தானின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளரான சயீட் அஜ்மல் தனது ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அறிமுகத்தை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ஒருநாள் போட்டி ஜூலை 28, 2008 இல், இருபதுக்கு இருபது போட்டி நடந்தது மே மாதம் 7ம் திகதி 2009. இருபதுக்கு இருபது போட்டியில் அகமட்  செஷாத்தும் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

மிஸ்பாவின் ரெஸ்ற் தலைமைத்துவம் பற்றி இதற்கு முன்னைய "V for Vettri, V for விளையாட்டு" நிகழ்ச்சியில் ஆராய்ந்திருந்தோம். அவர் தலைமை தாங்கிய 4 போட்டிகளில் 7 இனிங்ஸ்களில் கடைசி 6 இனிங்ஸ்களிலும் அரைச்சதங்களைப் பெற்றிருக்கிறார் மிஸ்பா.
அத்தோடு அணியும் போராட்ட குணத்துடன் போராடி வருவது வெளிப்படையானது. அணித்தலைவர் முன்நின்று போராடும்போது அணியும் ஒற்றுமையாக போராடுவது இயல்பே.

இப்படியான விடயங்களோடு மிஸ்பா உல் ஹக்கிற்கு யுனிஸ்கானின் உறுதியான ஆதரவு இருப்பதாக உள்வீட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு மிஸ்பா உல் ஹக் பெரிதாக ஊடகங்களுக்கு தன்னை முன்னிலைப்படுத்துவது குறைவானது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான விடயங்கள் மிஸ்பா உல் ஹக் இற்கு மிகச்சாதமாக இருக்கின்றன, எனினும் உலகக்கிண்ணம் போன்ற உலகளாவிய மிகப்பெரிய தொடரொன்றில் அணித்தலைமையை மாற்றுவது எந்தளவுக்கு சரியாக அமையும் என்ற கேள்வி மிஸ்பா உல் ஹக் இற்கு பாதகமாக அமையலாம்.

மறுபுறத்தில் பாகிஸ்தானின் கிரிக்கெட்டின் சுப்பர் ஸ்ரார் போன்ற அந்தஸ்தை இரசிகர்களிடம் வைத்திருக்கும் சகிட் அப்ரிடி இருக்கிறார். மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டிகளில் அணியின் முக்கிய சகலதுறை வீரராக, அயவஉh றinநெச என்று சொல்லப்படுகின்ற, நிரூபிக்கப்பட்ட வீரரான அப்ரிடி இருக்கிறார். அப்ரிடியின் தலைமையின் கீழ் 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளை மட்டுமே வென்றிருந்தாலும், அண்மைக்காலத்தில் பாகிஸ்தான் எதிர்நோக்கிய நெருக்கடிகளை வைத்துப் பார்க்கும்போது அணியை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் அப்ரிடியே. அத்தோடு அப்ரிடி என்ற விம்பத்திற்கு இருக்கும் மரியாதையும் அணித்தலைவர் பதவிக்கு அப்ரிடிக்கு சாதகமாக இருக்கின்றன.
அத்தோடு ஏற்கனவே அணியை வழிநடத்தியவர் என்ற அனுபவம், உலகக்கிண்ணம்  போன்ற பெரிய தொடருக்கு நிச்சயமாக உதவும். அத்தோடு மிஸ்பா உல் ஹக்கோடு ஒப்பிடுகையில் சர்வதேசப்போட்டிகளில் அப்ரிடி ஏராளமான அனுபவங்களைக் கொண்டவர்.

இப்படியான விடயங்கள் அப்ரிடிக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

எனினும்,
அவுஸ்ரேலியாவில் வைத்து பந்தைக் கடித்த சம்பவம், அப்ரிடியின் அண்மைக்கால ஃபோர்ம், மிஸ்பாவின் அண்மைக்கால எழுச்சி, அண்மைக்காலத்தில் அப்ரிடி வெளியிட்டு வரும் முரணான கருத்துக்கள் (உதாரணமாக கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் உலகக்கிண்ணத்தை வெல்ல வாய்ப்புகள் மிகக்குறைவு, எதிர்பார்ப்புகள் வேண்டாம் என்று அறிக்கை விட்டிருந்த அப்ரிடி, பின்னர் இவ் ஜனவரியில் பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகளில் சிறந்த அணி. உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அதிர்ச்சியளிக்கும் அணியாக அமையும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்) என்பதோடு, மிக முக்கியமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் இஜாஸ் பட் உடன் அப்ரிடிக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்படும் முரண்பாடுகள் அப்ரிடிக்கு எதிராக அமைய வாய்ப்புகள் உண்டு.

அப்ரிடியை இஜாஸ் பட் அணித்தலைவராக அவ்வளவுக்கு விரும்பியிருக்கவில்லை என்றும், அப்ரிடி ஊடகங்களில் அதிகளவு கருத்துக்களைத் தெரிவிக்கிறார் என்பதுவும், போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் வீரர்களைச் சாடி அப்ரிடி கருத்துத் தெரிவிப்பதுவும், அந்தக்காலத்தில் அப்ரிடியே சிறப்பாகச் செயற்படவில்லை என இஜாஸ் பட் கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் அப்ரிடிக்கு மிகப்பாதகமாக அமையலாம்.

எனினும்,
இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி தற்போது நியூசிலாந்தில் இருக்கும் இஜாஸ் பட், ஏனைய அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தி வருவதாகவும், உலகக்கிண்ணத்துக்கு முன்னர் அணித்தலைமையில் மாற்றம் வேண்டாம் என அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துவதாகவும், இதனால் இஜாஸ் பட், அப்ரிடியையே அணித்தலைவராகத் தெரிவுசெய்யலாம் எனவும் நம்பப்படுகிறது.

குறிப்பு: இது வெற்றி FM இல் வெள்ளிக்கிழமை தோறும்  இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு ஒலிபரப்பாகும் V for Vettri, V for விளையாட்டு நிகழ்ச்சியில் நேற்று (28-01-2011) ஒலிபரப்பாகியது. இதைத்தவிர இன்னும் மூன்று விடயங்களும் ஒலிபரப்பாகின.
வெற்றி வானொலியைக் கேட்டாரோ என்னவோ இன்று அப்ரிடி அடித்து நொருக்கியிருக்கிறார் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை. 19 பந்துகளில் அரைச்சதம். 25 பந்துகளில் 65 ஓட்டங்கள்.
மனிதருக்கு அணித்தலைமை கிடைப்பது இன்னும் உறுதியாகியிருக்கிறது.

இன்று மாலை இலங்கை நேரப்படி 6.15 இற்கு வெற்றியில் அவதாரத்திலும் இன்னும் பல விளையாட்டுச் செய்திகள் அலசப்படும். :-)
வெற்றி - http://vettri.lk

Friday, January 14, 2011

கொலைக்காற்று - 07

நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.

இதற்கு முன்னைய பகுதிகளை,
தரங்கத்திலும்,
எரியாத சுவடிகளிலும்,
சதீஷ் இன் பார்வையிலும்,
நா இலும்,
லோஷனின் களத்திலும்,
என் பார்வையிலும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இது 07ஆவது பகுதி, என் பார்வையிலிருந்து தொடர்கிறது.


தனது பையிலிருந்து எடுத்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தவாறே சம்பவங்களை அலசத் தொடங்கினார் அந்த சிஐடி. ஜெனி யாராலும் ஏமாற்றப்பட்டாளா என்பதையும், அப்படி ஏமாற்றப்பட்டிருந்தால் அதைச் செய்தது சூரியபிரகாசா அல்லது வெறுமனே ஜெனி ஏமாற்றப்பட்டதை அறிந்து அதற்குள் சேகரை சிக்க வைக்க சூரியபிரகாஸ் முயன்றானா என்பதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.
இத்தனையையும் அடிவாங்கி இரத்த வழிய மயங்கிக் கிடக்கும் சூரியபிரகாஸ் நினைத்தால் தீர்த்துவைக்க முடியும், ஆனால் அவனே காவல்துறை அதிகாரி என்பதால் முரண்டுபிடித்துக்கொண்டிருக்கிறானே என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஏதோ நினைத்தவராக தன் அலைபேசியால் யாருக்கோ அழைப்பெடுத்து தன்னை அறிமுகப்படுத்திவிட்டு "உங்களிடம் சில சம்பவங்கள் பற்றி அறிய விரும்புகிறேன். இருவரையும் உங்கள் வீட்டில் இன்னும் 10 நிமிடத்தில் சந்திக்கிறேன்" என்று கொஞ்சம் அதிகாரமான குரலிலேயே சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
கெளதமின் தொடர்மாடிக்கு முன்னால் காவல்துறை வாகனம் நின்றது, தொடர்மாடியின் கீழ்த்தளத்தில் நின்றவர்கள் அதிர்ச்சியாகப் பார்க்க "Sir, IC தாங்கோ" என்று கேட்ட தொடர்மாடி பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பார்த்து முறைத்துவிட்டுச் செல்ல பின்னால் வந்த உதவியாளர் "யோவ், அவர் சிஐடி. உன் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையா?" என்று கேட்டுவிட்டுச் சென்றான்.

அழைப்பு மணியை அடித்ததும் பதற்றத்துடன் அதிகாரியை எதிர்பார்த்திருந்த கெளதம், வர்ஷா தம்பதியினர் கதவைத் திறந்தனர்.
"Look, உங்களிடம் மரியாதையாகச் செயற்பட விரும்புகிறேன். என்னிடம் எல்லா விடயங்களையும் வெளிப்படையாகக் கதைத்தால் எனக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது. இல்லை மறைக்கப் போகிறீர்கள் என்றால் என்னை விட உங்களுக்கு அதிகமாகக் கூடாது." அன்போ, அதட்டலோ, எச்சரிக்கையோ என்று புரியாத ஒரு தொனியில் ஆரம்பித்தார் சிஐடி.
கேட்ட கேள்விகளுக்கு ஓரளவுக்கு தெளிவாகவே விடயங்கள் கிடைத்தது. ஜெனி விவகாரத்தைப் பற்றிக் கேட்கும்போது இலண்டனில் இணைந்து வாழ்ந்ததைப் பற்றிக் கேட்கும்போது மட்டும் கெளதம் சிறிது தடுமாறினான், வர்ஷா குழப்பத்துடன் நோக்கினாள்.
"கெளதம், வீட்டில் நீங்களா உங்கள் மனைவியா தேநீர் தயாரிப்பது?" சாதாரணமாகக் கேட்டார் அதிகாரி.
"வழமையாக மனைவி தான்". பதில் கிடைத்தது.
"இன்று ஒரு மாறுதலுக்காக ஏன் நீங்கள் தேநீர் தயாரிக்க்கூடாது?" போய்த் தேநீர் கொண்டுவா என்று சொல்வதைப் போன்ற தொனியில் சொன்னதைப் புரிந்துகொண்ட கெளதம் சமையலறைக்குச் சென்றான்.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அதிகாரி,
"Mrs.Goutham, விதுரன் பற்றியும் உங்கள் பற்றியும் சில சம்பவங்களை கண்டுபிடித்தோம். விதுரனை நீங்கள் கொல்லவில்லை என்பதை ஓரளவுக்கு முடிவாக்கியிருக்கிறோம் என்றாலும், உங்கள் மீது சில சந்தேகங்கள் உள்ளன. விதுரனைச் சுட்ட அறையில் இரண்டு வகையான துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன. விதுரனின் உடலில் கிடந்தவை வேறு ஒருவகை, அவனது உடமைகளைச் சேதப்படுத்தியது இன்னொரு வகை. அவனது உடமைகளைச் சேதப்படுத்தியது மிகவும் எளிய வகையானது. உங்கள் வீட்டைச் சோதனையிடுவதா அல்லது நீங்களாக என்னிடம் சம்பவங்களைச் சொல்கிறீர்களா?"
வர்ஷாவின் உடல் நடுங்கியது, கண்கள் கலங்கின.
"நா.... நா... நான் இங்க சொல்றதா? நா..." தடுமாறினாள்.
"அந்தத் துப்பாக்கியை எடுத்து வாருங்கள்" படுசாதாரணமாக அதிகாரி சொல்லவும் தேநீர்க் கோப்பைகளோடு கெளதம் வரவும் சரியாக இருந்தது.
எடுத்து வா என்றவாறு கண்களால் கட்டளையிட்டார் அதிகாரி. வர்ஷா எழுந்து சென்று துப்பாக்கியோடு வர, கெளதம் குழப்பத்தோடும் பயத்தோடும், பின்னர் கோபத்தோடும் வர்ஷாவைப் பார்த்தான்.
"Hello, hello... உங்கள் மனைவி எதையும் சொல்லவில்லை, நானாகத்தான் கண்டுபிடித்தேன். மென்பொருள் பொறியிலாளருக்கும் துப்பாக்கிக்கும் என்ன சம்பந்தம்? காவல்துறை நிலையத்தில் இருக்க வேண்டியவர் நீங்கள். அதைப் பற்றி எனக்குத் தேவையில்லை, எனக்கு இந்த வழக்கு விரைவில் முடிக்கப்படவேண்டும். அதுவரை நீங்கள் சாதாரணமாக வெளியில் சுற்ற வேண்டும்." படபடவென சொல்லி முடித்தார் அதிகாரி.

கையைப் பிசைந்துகொண்டிருந்தான் கெளதம், கொஞ்சம் தெளிவாக இருப்பதாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்தாள் வர்ஷா. அதிகாரி வீட்டை ஒருமுறை வடிவாக நோட்டம் விட்டார். பின்னர் இருவரையும் பார்த்து ஒரு போலிச்சிரிப்பு சிரித்துவிட்டு எழுந்து வெளியே செல்ல முயற்சித்தவர்திடீரென நிலத்தில் குப்புறப் படுத்தார். தோட்டா ஒன்று விர்ர்ர்றென்று பாய்ந்து சென்றது. அதுவரை வெளியே நின்ற உதவியாளர்கள் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிகளை வர்ஷா மற்றும் கெளதம் மீது நீட்ட, சைகையால் "இவர்களில்லை. பின்புறத்தால் தான் சுட்டார்கள்" என்று சொன்னார் அதிகாரி.
உதவியாளர்கள் வீட்டுக்குப் பின்புறமாக ஓடிச் சென்றார்கள்.
"ஒன்றும் யோசிக்க வேண்டாம். மாறுவேடத்தில் காவல்துறையினரை இந்தத் தொடர்மாடியில் நிற்க ஏற்பாடு செய்கிறேன். போய்ற்று திரும்பவும் வருவன்." சொல்லிவிட்டுக் கிளம்பினார் அந்த அதிகாரி.

கொஞ்சம் மகிழ்வாகவே தனது அலுவலகம் திரும்பிய சிஐடி அதிகாரி, அங்கிருந்த தனது உதவியாளரிடம் "சூரியபிரகாசுக்கு என்ன நடந்தது? எழும்பீற்றானா?" கேட்டவாறு கதிரையில் அமர்ந்தார். "அவர்... ஸ்ஸ்... அவன் எழும்பீற்றான், ஆனா ஒண்டும் கதைக்க மாட்டன் எண்டு அடம்பிடிக்கிறான்" தன்னை விட உயர்பதவியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியை அவன் என்றழைக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட உதவியாளர் நிலைமையை விளக்கினான். உதவியாளரைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு சூரியப்பிரகாசை நோக்கி நடக்கத் தொடங்கினார் அதிகாரி.
தனது பிரத்தியேக மடிக்கணணியையும் கொண்டு சூரியபிரகாசிடம் சென்றவர் கணணியை நீட்டி "உன் sooryaprakashthepolice@gmail.com என்ற கணக்கிற்குள் உள்நுழை" என்றான். சூரியபிரகாஷ் மறுத்தான். அதிகாரி சிரித்தவாறே password recovery option இல் சென்று recovery code ஐ அலைபேசிக்கு அனுப்பும் கட்டளையைக் கொடுத்து சூரியபிரகாசிடமிருந்து கைப்பற்றப்பட்ட அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அதிர்ஷ்ரவசமாக தனது ஜிமெயில் கணக்குடன் தனது அலைபேசியை சூரியபிரகாஷ் இணைத்து வைத்திருந்ததால் அதன்மூலம் சூரியபிரகாசின் ஜிமெயில் கடவுச்சொல்லை மாற்றி உள்நுழைந்தார். எதுவும் யோசிக்காமல் search mail இல் "vithuran" என்று தட்டினார்.
சூரியப்பிரகாசைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.


இறுதிப்பகுதியை எனது குரு வந்தியத்தேவன் தொடர்வார்.

Monday, January 10, 2011

இலங்கை அணித் தெரிவு - என் சந்தேகங்கள்...

2011 உலகக் கிண்ணத்திற்கான இலங்கைக் கிறிக்கற் அணியின் 15 பேர் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பெரிதாக மோசமான தெரிவுகள் (ஆஷஷ் இற்கு டொகேர்ட்டி போல) எதுவும் இல்லாமல் வந்திருக்கிறது.
பொதுவாகவே எதிர்பார்த்த ஒரே ஒருவரான சுராஜ் ரந்தீவ் இற்குப் பதிலாக இடதுகைச் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் கொண்டுவரப்பட்டது தான் சிறிது எதிர்பார்க்கப்படாதது.
அதுவும், அவுஸ்ரேலியாவில் ஏராளமான கிறிக்கற் விமர்சகர்களைக் கவர்ந்த தொடருக்குப் பின்னர் ரந்தீவ் கழற்றிவிடப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்புவதில் ஆச்சரியமில்லை.
இதுவரை ரந்தீவ் போட்டியைத் தலைகீழாக மாற்றுமளவிற்கு பந்துவீசவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும், ரந்தீவ் விளையாடிய 21 போட்டிகளில் இலங்கை 13 இல் வென்றிருக்கிறது, இலங்கை வென்ற 13 போட்டிகளில் ரந்தீவ் ஓரளவு சிறப்பாகவே பந்துவீசியிருக்கிறார்.  என்ன அடிப்படையில் ரங்கன ஹேரத் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பது மிகமுக்கியமான கேள்வி.
இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அரவிந்த டீ சில்வா, இடது சுழற்பந்துவீச்சாளர் என்ற காரணத்தால் என்றும், ரந்தீவ் செய்த பிழை ஒன்றுமில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
எனக்கிருக்கும் சந்தேகம்,
அப்படியானால் இடது, வலது combination ஐ எடுப்பதற்காக முரளியோடு அல்லது மென்டிஸோடு எல்லாப் போட்டிகளிலும் ஹேரத் விளையாடுவாரா?
ஒருநாள் போட்டிகளில் இந்த இடது, வலது என்ற வித்தியாசங்கள் பெரிதாக வித்தியாசப்படுமா?

இங்கு இன்னொரு கேள்வி,
இடது வலதுகைப் பந்துவீச்சாளர்கள் சுழற்பந்துவீச்சிற்குத்தானா?
ஏன் இடதுவேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் அப்போது அணிக்குள் வரவில்லை?
உங்கள் வேகப்பந்துவீச்சு அணி மலிங்க, குலசேகர, திஸ்ஸர பெரேரா, அன்ஜலோ மத்தியூஸ் என்று முழுவதும் வலதுகைப்பந்துவீச்சு அணியாக இருக்கிறதே? (பெர்னான்டோ தனியே வெளியே. மேலேயுள்ள நால்வரும் ஒரேபோட்டியில் விளையாட அதிகபட்ச வாய்ப்புண்டு)

அத்தோடு சமிந்த வாஸ் இலங்கையின் பதினொருவர் அணிக்குள் உள்ளே வருவது கடினம் என்பது வெளிப்படையானது, ஆனால் அதற்கு அரவிந்த கொடுத்த விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை.
சமிந்த வாஸின் வேகம் குறைந்திருப்பதையும், ஸ்விங் குறைந்திருப்பதையும் சொல்லியிருந்தார் அரவிந்த.
ஆனால் சமிந்த வாஸ் எப்போதும் "வேகப்"பந்துகளுக்கு பெயர் போனவர் கிடையாது, மணிக்கு 120 கிலோமீற்றர் என்பது சிறிது குறைவு தான், ஆனால் டெக்கான் சார்ஜர்ஸ் இற்காக கடந்த ஐ.பி.எல் இல் சமிந்த வாஸ் பந்துவீசியதைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
6 போட்டிகளில் 9 விக்கற்றுகள், 2 ஓட்டமற்ற பந்துப்பரிமாற்றங்கள், ஒரு பந்துப்பரிமாற்றத்திற்கு 6.31, சராசரி 14.6.
அஸ்வினுக்குப் பிறகு கடந்த ஐ.பி.எல் இல் குறைந்தளவு economy rate உள்ள பந்துவீச்சாளர் சமிந்த வாஸ்.
ஐ.பி.எல் கடந்த முறை இந்தியாவில் தான் நடந்தது, இங்கிலாந்திலல்ல.

தற்போதைய தலைமுறை துடுப்பாட்ட வீரர்கள் ஸ்விங்கை சரியாக விளையாடுவதில்லை, சமிந்த வாஸ் இடதுகை வேகப்பந்துவீச்சாளராக இருப்பதால் சிறியளவு ஸ்விங் செய்தாலே போதுமானது.
குலசேகர தொடர்ந்து 2,3 போட்டிகளில் படுமோசமாகச் செயற்பட்டால் என்ன செய்வார்கள்?
மலிங்கவின் back-up ஆன பெர்னான்டோ விளையாடுவாரா?
பெர்னாண்டோ, மலிங்க இருவரும் விளையாடினால் யார் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவது?

அத்தோடு அண்மைக்காலமாக சமிந்த வாஸின் துடுப்பாட்டம் மிகப்பெரியளவு முன்னேறியிருக்கும் நிலையில், இங்கிலாந்தில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக அடித்து ஆடியிருந்தார், சமிந்த வாஸை நெருக்கடியான நேரங்களில் துடுப்பாட்ட வீரராகவும் பயன்படுத்தியிருக்கலாமே?

தோழர் அரவிந்த டீ சில்வாவிடம் யாராவது இந்தக் கேள்விகளைக் கேட்கவும். ;-)


(இனி இப்பிடி சிறிய பதிவுகளை இடுவதாகத்தான் முடிவு. ;-)
இனி எல்லாமே இப்பிடித்தான்....  )