Saturday, February 19, 2011

அவுஸ்ரேலியாவில் முரளி? கடந்தகால வடுக்கள்...

அவுஸ்ரேலியாவில் சுழற்பந்துவீச்சு வருகைப் பயிற்றுவிப்பாளராக ரெஸ்ற் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கும் முத்தையா முரளிதரன் செல்லலாம் என்ற, அதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் இதற்கு முன்னர் முரளிதரன் அவுஸ்ரேலியாவில் சந்தித்த எதிர்ப்புகளை பதிந்துகொள்ள முனைகிறது இந்தப் பகுதி.


முரளிதரன் மீது முதன்முதலாக பந்தை எறியும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது அவுஸ்ரேலியாவில் தான் என்பது இதில் பொருத்தமானதாகவே அமைந்திருக்கிறது.
1995ம் ஆண்டு அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் Boxing day test போட்டியில் பந்தை எறிகிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்ரேலிய நடுவரான டெரல் ஹெயார் 7 தடவைகள் முறையற்ற பந்துகளை அறிவித்திருந்தார்.

பின்னர் 1996ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி மேற்கிந்தியத்தீவுகளுடனான ஒருநாள் போட்டியில் தனது முதற்போட்டியில் நடுவராகக் கடமையாற்றிய ரொஸ் எமர்சன், மீண்டும் முரளியை பந்தை எறிகிறார் என முறையற்ற பந்துகளை வழங்கியிருந்தார். இதில் சில பந்துகள் புறச்சுழல் பந்துவீச்சு என்று சொல்லப்படுகிற leg breaks என்பது குறிப்பிடத்தக்கது. leg break பந்துகளை ஒருபோதும் எறிய முடியாது என்ற நிலையில் முரளி இலக்கு வைக்கப்படுகிறார் என்பது தெளிவாகப் புலப்பட்டது.

1996ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னர் ஹொங் கொங் இல் முரளிதரனின் பந்துவீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்பட்டநிலையில் 1999 ஆம் ஆண்டு ஜனவரி 23 ம் திகதி ரொஸ் எமர்சனால் மீண்டு பந்தை எறிகிறார் என்று அழைக்கப்பட்டிருந்தார் முரளி.
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்திற்கெதிராக இடம்பெற்ற போட்டியில் அர்ஜூன ரணதுங்க, முரளி மீதான நடவடிக்கைகளுக்கு எதிராக அணியை மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எனினும்,
கடந்த ஆண்டு ஜூலை அவுஸ்ரேலியப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் ரொஸ் எமர்சன், முறையற்ற பந்துகளாக அறிவிக்கும்படி அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரால் தான் உத்தரவிடப்பட்டிருந்ததாக சொல்லியிருந்தார். தனது அடிலெய்ட் போட்டிக்கு முன்னர் அழைத்த குறித்த அதிகாரி, தனக்குரிய அறிவுறுத்தல்களை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதுவரை காலமும் முரளிதரன் தூஸ்ரா பந்துகளை வீசியதில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இலங்கையில் வைத்து தூஸ்ரா கேள்விக்குட்படுத்தப்பட்டு பின்னர் தூஸ்ராவும் அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவரை காலமும் இவற்றிற்கு பெரிதாக பதிலளித்துவராத முரளி, முதன்முதலில் பெரிய அளவில் எறியும் குற்றச்சாட்டிற்கெதிராக 2004ஆம் ஆண்டில்  மெல்பேர்ண் வானொலி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கிளெய் மக்ரா 13 பாகை, கிலெஸ்பி 12, பிரட் லீ 14 அல்லது 15 பாகை முழங்கை நீட்டுகிறார்கள், இவர்கள் எனது பந்துவீச்சுப் பற்றிக் கதைப்பது கண்ணாடி வீட்டுக்குள்ளிலிருந்து கல்லெறிவது போலாகும், அவர்கள் அவுஸ்ரேலிய வீரர்கள் என்பதால் அவர்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இது சர்வதேச கிரிக்கெட் சபை முரளிதரனின் தூஸ்ராவைப் பரிசோதிக்க முயன்று, பின்னர் 99 வீதமான பரிசோதனைக்குட்படுத்தபட்ட பந்துவீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட் சபையில் முன்னைய விதிகளிற்குட்பட்டு பந்துவீசவில்லை என்றும், சர்வதேச கிரிக்கெட் சபையின் முன்னைய விதிகளிற்குட்பட்டு பந்துவீசுவது நடைமுறைச்சாத்தியமற்றது என்று கூறி 15 பாகை அளவு அனுமதிக்கப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு தெரிவித்த பின்னர் முரளி தெரிவித்த கருத்தாகும்.

இதில் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த டீல் ஜோன்ஸ் முரளிதரன் மீது முன்னர் கடுமையான விமர்சகராக இருந்து பின்னர் தனது தவறை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோன்ஸ் தவிர,
அவுஸ்ரேலியாவின் கில்கிறிஸ்ற் உம் முரளிதரன் பந்தை எறிகிறார் என்ற அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு வந்தவர் என்பதுவும் குறிப்பிடதத்க்கது.


2008ஆம் ஆண்டு CB தொடரில் இரசிகர்களால் முட்டைத் தாக்குதலுக்குள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர்களில் முரளியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் இரசிகர்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் எப்போதுமே முரளிதரன் மீதான வசைபாடுதலை நிறுத்திககொள்ளவில்லை என்பதுவும் அதுகுறித்து முரளி "அவுஸ்ரேலியர்கள் குறித்துப் பிரச்சினையில்லை. கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்ட சிலர்தான் முறையற்று நடக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதத்க்கது.

தவிர,
2004ஆம் ஆண்டில் அப்போதைய அவுஸ்ரேலிய பிரதமரான ஜோன் ஹாவர்ட் முரளிதரன் எறிகிறார் என்று அழைத்தமையும், பின்னர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் கடந்த ஆண்டு ஜூலையில் முரளிதரன் சிறந்த பந்துவீச்சாளர் என தான் சர்வதேச கிரிக்கெட் சபைத்தலைவர் பதவிக்கான போட்டியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இந்த நிலையில்,
அவுஸ்ரேலியர்கள் பகுதியிலிருந்து அண்மைக்காலத்தில் முரளி குறித்த பார்வை மாறுபட்டுவருவதை அறியக்கூடியதாக இருந்திருக்கும்.
இந்நிலையில் முரளி அவுஸ்ரேலியாவின் centre of excellence இல் சுழற்பந்துப் பயிற்சியாளராக அழைக்கப்பட்டிருப்பது உண்மையில் முரளிதரன் மீதான அவுஸ்ரேலியாவின் பார்வைகள் கணிசமானளவு மாறியிருப்பதற்கான அறிகுறியா அல்லது அவர்களது சுழற்பந்துவீச்சுப் பகுதி ஷேன் வோர்ண் இற்குப் பின்னர் தடுமாறிவருவது மட்டுமே அதற்கான காரணமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒருசில கிரிக்கெட் விமர்சகர்களால் ஷேன் வோணோடு ஒப்பிடப்பட்டு திறமையற்ற பந்துவீச்சாளர் என முறையற்று, பக்கச்சார்பாக வெளியிடப்பட்டு வரும் கருத்துக்களின் நடுவில், அந்த ஷேன் வோண் பிறந்து, சாதனை படைத்த நாட்டில் சுழற்பந்துவீச்சாளராக முரளிதரன் அழைக்கப்பட்டிருப்பது சில விடயங்களை அடிப்படையான கிரிக்கெட் அறிவுள்ளவர்களுக்கும், ஏன் கிரிக்கெட் அறிவே இல்லாதவர்களுக்கும் கூட விளக்கியிருக்கும்.

( இது வெற்றியின் V for Vettri, V for விளையாட்டிற்காக கடந்த 11ம் திகதி ஒலிபரப்பாகிய பிரதி. கடுமையான சோம்பல் காரணமாக இவ்வளவு "விரைவாக" பதிவேற்றுகிறேன்.
இயலுமானால் உலகக்கிண்ணத்தில் விளையாடும் Associate அணிகள் பற்றிய பார்வையை இன்று மாலையே பதிவேற்றுகிறேன். :-)  )

Tuesday, February 8, 2011

முரளிக்குப் பின் சுழற்பந்துவீச்சு....

ரெஸ்ற் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள இலங்கையின் முத்தையா முரளிதரன் இந்த உலகக்கிண்ணத் தொடரோடு ஓய்வுபெறுகின்ற நிலையில் முரளிதரனுக்குப் பின்னரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சுழற்பந்துவீச்சாளர்களைப் பற்றி ஆராய்கிறது இப்பகுதி.


ராஜா

தட்டையான ஆடுகளங்கள், குறுகிய எல்லைக்கோடுகள், தடிப்பான துடுப்பு மட்டைகள், பவர் பிளேக்கள் என்று சுழற்பந்துவீச்சுக்கு எதிரான எல்லாவற்றையும் கொண்ட தற்போதைய ஒருநாள் போட்டிகளில் இன்னமும் சுழற்பந்துவீச்சாளர்கள் திறமையாகச் செயற்படுகிறார்கள் என்பது சுழற்பந்துவீச்சின் தனித்தன்மைகளில் ஒன்று.
முரளிதரனுக்குப் பின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட வாய்ப்புண்டு என அறிவதற்காக கடந்த 5 வருடங்களில் வீரர்களின் பெறுபேறுகளை ஆராய்ந்து அது தொடர்பாக இந்தப் பதிவு.

கடந்த 5 வருடங்களில் சுழற்பந்து அல்லது மெதுவான பந்துவீசுபவர்களில் முன்னிலை வகிக்கும் சிலராக,
பங்களாதேஷின் அப்துர் ரஷாக் மற்றும் ஷகிப் அல் ஹசன், விற்றோரி, முரளிதரன், அப்ரிடி, ஹர்பஜன், உற்செயா, மென்டிஸ், ப்றைஸ், போத்தா, சுவான் ஆகியோரைக் குறிப்பிடலாம்.


இதில் அப்துர் ரஷாக் 105 போட்டிகளில் 155 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கடந்த 5 வருடங்களில் சிறப்பாகப்பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளராக இருக்கிறார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அப்துர் ரஷாக் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை அண்மையில் கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 4 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக 4 தடவைகள் யாரும் இதுவரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5 முறை 4 விக்கெட் பெறுதிகள், 3 முறை 5 விக்கெட் பெறுதிகள் என்று ஏனைய சுழற்பந்துவீச்சாளர்களிடமிருந்து தனித்துத் தெரிகிறார் ரஷாக். சிறந்த சுழற்பந்துவீச்சாளராக பரவலாக பேசப்படாமலேயே ஏனைய சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் என்று கருதப்படுபவர்களை விட அணிக்காக சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார் ரஷாக்.


அடுத்தவரும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவரே. பங்களாதேஷ் அணியின் தற்போதைய தலைவராக ஷகிப் அல் ஹசனே அவர். 101 இனிங்ஸ்களில் 129 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் அல் ஹசன், ஓர் சகலதுறை வீரர் என்பதிலிருந்து கடந்த காலங்களில் பங்களாதேஷ் முன்னேறியிருப்பதற்கான தெளிவான காரணம் புலப்படுகிறது. தங்கள் அணிக்காக தனியே சுழற்பந்துவீச்சாளராக விளையாடுபவர்களை விட ஒரு சகலதுறை வீரர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பது, அதுவும் பங்களாதேஷ் போன்ற ஓர் சிறிய, வலிமை குறைநத நாட்டிலிருந்து கைப்பற்றியிருப்பது அல் ஹசனின் திறமையை தனித்து சிறப்பித்துக் காட்டுகிறது.

சுழற்பந்துவீச்சு இரட்டையர்கள்!


முதலிரண்டு இடங்களில் இரு பங்களாதேஷ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது இந்த உலகக்கிண்ணத்தில் அவர்கள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை ஆவலுடன் உற்றுநோக்க வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


அதற்கடுத்த நிலையில் விற்றோரி இருக்கிறார். 92 இனிங்ஸ்களில் 118 விக்கெட்டுகள்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம், முதல் 3 பேரும் இடதுகைச் சுழற்பந்துவீச்சாளர்கள் என்பதுதான்.

அடுத்த இடத்தில் முரளி, அப்ரிடி, ஹர்பஜன், உற்செயா, மென்டிஸ், ப்ரட் ஹொக், ப்றைஸ், போத்தா, ஸ்வான், யுவ்ராஜ் என்று அந்த வரிசை நீண்டு செல்கிறது. எனினும் முதல் 3 பேரோடும் ஒப்பிடும்போது முரளி, ஸ்வான் இருவரைத்தவிர ஏனையவர்கள் சிறப்பாகப்பந்துவீசுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை.


இதில் குறிப்பிடத்தக்க ஒரு வீரர், க்ரேம் ஸ்வான். ஓஃவ் ஸ்பின்னர் என்றால் தூஸ்ராவைக் கொண்டிருக்க வேண்டும், அப்போதுதான் சர்வதேசப் போட்டிகளில் நிலைக்கலாம் என்று முரளிக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட எழுதப்படாத விதிக்கு மாறாக தூஸ்ரா இல்லாமல் சர்வதேசக் கிரிக்கெட்டில் தொடர்ந்தும் பிரகாசித்து வருபவர். உலகின் தற்போதைய முதன்மைச் சுழற்பந்துவீச்சாளராகக் கணிக்கப்படும் வீரர், எனினும் ஸ்வான் தன்னை நிரூபிக்க வேண்டிய விடயங்களும் உண்டு.



Drift and spin from Swann.
எதிர்வரும் உலகக்கிண்ணத்தில் ஸ்வானின் திறமை வெளிப்பாடுகள் ஸ்வான் மீதான கணிப்பீடுகளை மேற்கொள்ள அளவீடாகப் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.


இங்கு சிம்பாப்வேயின் றே ப்றைஸ், புரொஸ்பர் உற்செயா இருவர் பற்றியும் பார்க்க வேண்டிய கட்டாயமுண்டு.




சிம்பாப்வே சார்பாக ஆரம்பப் பந்துவீச்சாளர்களாகவும் அடிக்கடி செயற்படும் இந்த இருவரும் தற்போதைய ஒருநாள் போட்டிகள் சுழற்பந்துவீச்சாளர்களிடம் எதிர்பார்க்கும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தல் என்ற பணியை மிகச்சிறப்பாகச் செய்யக்கூடியவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.
ஏனைய முன்னணிச் சுழற்பந்துவீச்சாளர்களளவுக்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறன் இல்லாவிட்டாலும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி அழுத்தங்களை அதிகரித்து மற்றைய புறத்தில் பந்துவீசும் பந்துவீசும் பந்துவீச்சாளருக்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றும் வாய்ப்பினை அதிகரிப்பதற்கு இவ்வகையான பந்துவீச்சு நிச்சயமாக உதவக்கூடிய ஒன்று.


முடிவாக,
எதிர்காலத்தில் சுழற்பந்துவீச்சு அழியக்கூடிய அல்லது வெற்றிபெற முடியாத ஒன்றாக கருதப்பட்டிருந்தாலும், ரஷாக், ஹகிப் அல் ஹசன், ஸ்வான் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.

குறிப்பு: இது வெற்றி FM இன் விளையாட்டு நிகழ்ச்சியான V for Vettri, V for விளையாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு ஒலிபரப்பான 4 தலைப்புகளில் ஒன்று.
பதிவுக்காக இதைக் கொஞ்சம் நீட்டி எழுதலாம் என்று வைத்திருந்தால் அது நடப்பதாகக் காணோம்.
எனவே அப்படியே பதிவிடுகிறேன். அடுத்த வாரத் தலைப்புக்களில் ஒன்றை முடியுமானளவு விரிவாகத் தர முயற்சிக்கிறேன்.