இங்கிலாந்துக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ருவென்ரி ருவென்ரி போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டதும் அதை எதிர்த்துத் தெரிவிக்கப்பட்ட இரு விடயங்கள் முக்கியமானவை.
முதலாவது சனத் ஜெயசூரியவின் உள்ளடக்கம். இரண்டாவது, உப அணித்தலைவராக திலின கண்டம்பியின் நியமனம்.
இதில் ஒவ்வொன்றும் மற்றையதற்கு சளைத்தளவுக்கு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கவில்லை.
சாதனை நாயகனாக சனத், அண்மைக்காலமாக இலங்கை இரசிகர்களின் எதிர்ப்புக்களை நிறையவே சம்பாதித்திருந்தார். அதுவும் மோசமான form காரணமாக தொடர்ந்து சறுக்கி வந்த நிலையில் அரசியலிலும் குதித்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியும், கிறிக்கற்றிலிருந்து ஓய்வு பெறாதது நிறையவே சந்தேகங்களை எழுப்பியிருந்தது. சிறிது காலம் அணியில் தேவையற்ற ஒருவராக இருந்த சனத், அவரது மாபெரும் சாதனைகளையும், திறமைகளையும் மக்கள் மறந்து அவரை முழுமையாக வெறுக்குமளவிற்கு அவரது இறுதிக்காலம் அமைந்திருந்தது.
சில ஜாம்பவான் வீரர்கள் இறுதிக்காலத்தில் போதியளவு பங்களிப்புகளை வழங்காமல் அணியில் தொங்கிக் கொண்டிருப்பதொன்றும் புதிதானதொன்றில்லை என்ற போதிலும், ஓர் அரசியல்வாதி அவ்வாறு தொங்கிக் கொண்டிருப்பது பெரியளவில் வரவேற்புகளை வழங்கியிருக்கவில்லை.
ஓர் ஆளுங்கட்சி அரசியல்வாதி form இன்றி அணியில் இடம்பெற முடியும் எனில் அதற்கு ஒரே ஒரு காரணம் மாத்திரமே காணப்பட முடியும் என்று சொல்லலாம். ஆகவே ஒரு சாதனையாளர், வெறுக்கப்படும் நபராக மாறினார்.
இந்த நிலையில் 09ம் திகதி அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கான இலங்கை அணியில் சனத் ஜெயசூரிய இடம்பெற்றிருந்தது பெரியளவில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக இங்கிலாந்துக்கான இலங்கை ரெஸ்ற் அணி சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு, அங்கு சென்று பெரிதளவில் சாதிக்காதது மாத்திரமன்றி, சாதனை நாயகன் முத்தையா முரளிதரன் "இலங்கை தனது கிறிக்கற் வாழ்வில் வெளிப்படுத்திய மிக மோசமான திறமை வெளிப்பாடு" என விளித்த கார்டிவ் ரெஸ்ற் தோல்வியை சந்தித்திருந்தது.
அடுத்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திப் பின்னர் குறித்த போட்டியை சமநிலை செய்திருந்தது. அதுவும் இரண்டாவது இனிங்ஸ் இல் டில்ஷான் துடுப்பெடுத்தாடுவது சந்தேகத்திற்குள்ளான நிலையில் சற்று பதற்றப்பட்டே போட்டியை சமநிலைப்படுத்தியிருந்தது.
ஆகவே முரளிதரனின் ஓய்வு, அதற்குப் பின்னர் லசித் மலிங்கவின் ரெஸ்ற் போட்டிகளிலிருந்தான அறிவிக்கப்படாத ஓய்வு ஆகியவற்றின் காரணமாக தடுமாறிவரும் இலங்கை அணி, இன்னொரு தடவை இன்னொரு பின்நோக்கிய படியொன்றை எடுத்து வைக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. சனத்தின் உள்ளடக்கத்தை எதிர்த்தவர்களில் சனத்தின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் பாதிப்பேரும், இலங்கை ரெஸ்ற் அணியின் தோல்விகளின் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி சனத் ஜெயசூரியவின் வருகையால் தடுமாறப் போகிறது என்ற கவலையுடைவர்கள் பாதிப்பேரும் அடங்குவர்.
முதற்பகுதியினரை விடுத்து, இரண்டாம் பகுதியினரைப் பற்றி மாத்திரமே கருத்திற்கொள்ள முடியும்.
என்னைப் பொறுத்தவரை சனத் ஜெயசூரியவிற்கு ஓர் இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதில் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. இலங்கைக் கிறிக்கற் அணியின் வரலாற்று மாற்றிப் போட்ட, இலங்கைக் கிறிக்கற் அணி எதை வைத்து இவ்வளவு தூரம் வளர்ந்ததோ, உலக சாதனையாளன் முத்தையா முரளிதரன் தன் கிறிக்கற் வாழ்வின் மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்த அந்த 1996ம் ஆண்டு உலகக்கிண்ண வெற்றிக்கு மிக முக்கிய காரணியாக அமைந்த, குறித்த தொடரின் தொடர் நாயகன் விருதைப் பெற்றுக்கொண்ட ஒரு சாதனையாளனுக்கு இறுதியாக விடைபெறல் வாய்ப்பு வழங்கப்படுவது கட்டாயமானது என்பது என் கருத்து.
ஜெயசூரியவின் அரசியல், அவரது இறுதிக்கட்ட நகர்வுகள் என்பன ஒரு பக்கமிருக்க, அவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்க்கின், சனத் ஜெயசூரிய என்பவர் இலங்கைக் கிறிக்கற்றில் தோன்றிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். முத்தையா முரளிதரனுடம் சேர்ந்து, இலங்கை பெற்றெடுத்த தலைசிறந்த வீரராகக் கருதப்படக் கூடியவர் என்ற வகையில், அவருக்குரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
நான் வாசித்தறிந்த சில தகவல்களின் அடிப்படையில், விடைபெறும் போட்டி ஒன்று வழங்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே சனத் ஜெயசூரியவிற்கு குறித்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஆகவே லோர்ட்ஸ் போட்டியோடு ஓய்வுபெறுவது என்பது கிட்டத்தட்ட சனத் ஜெயசூரியவிற்கு திணிப்பட்ட ஒரு முடிவாகவே அமைந்திருந்தது. அதாவது forced decision.
எனக்குத் தெரிந்தவரையில், 5 ஒருநாள் போட்டிகளையும் விளையாட சனத் ஜெயசூரிய விரும்பியிருப்பார், ஆனால் அவருக்கு ஒரு போட்டிக்கான வாய்ப்பு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
இதில் எழுப்பப்படுகின்ற இன்னொரு வினா, விடைபெறல் போட்டி எனில் அதை இலங்கையில் வைத்து வழங்கியிருக்கலாமே, அதை ஏன் இங்கிலாந்தில் வைத்து வழங்க வேண்டும்.
குறிப்பாக சமிந்த வாஸிற்கு வழங்கப்பட்ட விடைபெறல் ரெஸ்ற் போட்டி இலங்கையிலேயே இடம்பெற்றது. ஆகவே எதற்காக இங்கிலாந்தில் வைத்து அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அதுவும் உலகக்கிண்ணம் நிறைவடைந்த பின்.
ஆனால் சில யதார்த்தங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என நம்புகிறேன். இதுவரை இலங்கையின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் (டில்ஷான், தரங்க) சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வந்தார்கள். சனத் ஜெயசூரியவை மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாட எடுத்த முயற்சி பெரிதளவில் வெற்றியைத் தராத நிலையில், சனத் ஜெயசூரிய இலங்கை அணியின் தெரிவுகளிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்.
ஆனால் தற்போது உபுல் தரங்க தடைசெய்யப்பட்ட மருந்து ஒன்றை உட்கொண்டாரா என அறிய விசாரணைகள் நடத்தப்படவுள்ள நிலையில், ஆரம்பத்துடுப்பாட்ட இடம் காலியாகவுள்ள நிலையில், சாதனை வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பது என் கருத்து.
இலங்கை அணி உலகக்கிண்ணத்திற்கு முன்னர் ஜெயசூரியவிற்கு விடைபெறல் போட்டியொன்றை வழங்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை, அவ்வேளையில் உலகக்கிண்ணத்திற்கான அணியைத் தெரிவுசெய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த வேளையில் சனத் ஜெயசூரியவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பின், அதற்கு இப்போதுள்ளதை விட அதிகமான எதிர்ப்புக்கள் கிடைத்திருக்கும்.
இலங்கையின் அடுத்த உள்நாட்டில் இடம்பெறும் தொடராக அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தொடர் இருக்கும் என நம்புகிறேன். அதுவரை காத்திருக்காமல் இப்போது வாய்ப்பு வழங்குவதற்கு ஓர் வாய்ப்பாக அமைந்ததோடு, சிலவேளைகளில் அந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது உபுல் தரங்க மீதான விசாரணைகள் நிறைவடைந்து அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் அவர் தொடர்ந்து விளையாடுவதற்கும் வாய்ப்பாக அமையுமல்லவா?
ஆகவே என்னைப் பொறுத்தவரை சனத ஜெயசூரியவின் தெரிவு முழுமையாகச் சரியானது.
உலகில் தோன்றிய சிறந்த சகல துறை வீரர்களில் ஒருவருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள் சனத்.
என்னை எரிச்சற்படுத்திய விடயம் திலின கண்டம்பியின் உப அணித்தலைவர் பதவி. எனக்குத் திலின கண்டம்பி மீது தனிப்பட்ட விருப்பமின்மைகள் எவையும் கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால் திலின கண்டம்பி அணிக்குள் இடம்பெற வேண்டும் என்று "முன்பு" கருதியவன் நான்.
அத்தோடு திலின கண்டம்பியின் அணித்தலைமைப் பெறுபேறுகள் மோசமானவையும் கிடையாது. என் ஞாபகங்கள் சரி எனில், தென்னாபிரிக்காவிற்கு சென்று தென்னாபிரிக்க A அணிக்கெதிராக சிறப்பாக பெறுபேறுகளை வெளிப்படுத்தில இலங்கை A அணியைத் திறம்பட வழிநடத்தியதோடு, குறித்த தொடரில் தனிப்பட்ட ரீதியிலும் கலக்கியிருந்தார் திலின கண்டம்பி.
ஆகவே திலின கண்டம்பியின் தலைமைத்துவப்பண்புகளும் அந்தளவுக்கு குறைசொல்லக்கூடியவன கிடையாது.
ஆனால் எனக்கிருக்கும் கேள்விகள் என்னவெனில், கடந்த உலகக்கிண்ணத்தின் போது திலின கண்டம்பிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கையில் உள்ள சிறந்த 15 கிறிக்கற் வீரர்களில் ஒருவராக திலின கண்டம்பி அப்போது இருந்திருக்கவில்லை. உலகக்கிண்ணத்தில் விளையாடிய இலங்கை அணியிலிருந்து ஓய்வுபெற்றது முத்தையா முரளிதரன் மாத்திரமே. முரளிதரனின் இடத்திற்கு சுராஜ் ரந்தீவ் சேர்க்கப்பட வேண்டும்.
அப்படியானால் ஒரு தொடருக்கு முன் தேவையற்ற வீரராக இருந்த ஒருவர், எவ்வாறு திடீரென உப அணித்தலைவர் பதவி வழங்கப்படுமளவிற்கு உயர்ந்தார். அதுவும் உள்ளூர் போட்டிகளில் போதியளவுக்கு பிரகாசிக்காத போது?
உப அணித்தலைவராக 5 போட்டிகளிலும் திலின கண்டம்பி விளையாடப் போகிறாரா? ஆகவே இலங்கை கிறிக்கற் அணியின் பதினொருவர் அணிக்குள் நிரந்தர இடம் பெறுமளவிற்குமளவிற்கு தன்னை நிரூபித்துவிட்டாரா கண்டம்பி?
கண்டம்பி விளையாடிய சில இனிங்ஸ்கள் அபாரமானவை. இந்தியாவுக்கெதிராக ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியொன்றில், இலங்கை அணி வெல்லவே வாய்ப்பில்லாத ஒரு போட்டியை வென்றுவிடுவோமோ என்று நம்புமளவிற்கு அபாரமாக ஆடியிருந்தார். குறித்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என நினைக்கிறேன்.
ஒரு பக்கமான விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் திலின கண்டம்பி ஆடிய அந்த ஆட்டம் மறக்க முடியாதது.
ஆனால் மன்னிக்கவும் திலின கண்டம்பி, உங்களை நீங்கள் முழுமையாக நிரூபிக்கவில்லை.
எங்கள் விமர்சனங்களுக்கு பதிலளிக்கக்கூடிய ஒரே வழி 6 போட்டிகள் கொண்ட தொடரில் ஓட்டங்களைக் குவிப்பது மாத்திரம் தான்.
ஓட்டங்களைக் குவித்தால் எங்களைப் போன்ற "குறை சொல்பவர்கள்" அனைவரும் வாய்மூடி மௌனிகளாகிவிடுவோம்.
நாங்கள் விரும்பும் ஒருவருக்காக எங்களை நாங்களே முட்டாளாக உணர்வதும் ஒரு சுகம் தான்.
குறிப்பு: இது நான் தற்போது பணிபுரியும் வெற்றி வானொலியில் இடம்பெறும் வாராந்த விளையாட்டு நிகழ்ச்சியொன்றிற்காக மூத்த பதிவரும், எங்கள் பணிப்பாளருமான லோஷன் அண்ணாவுடன், மூத்த விளையாட்டு விமர்சகர்/அறிவிப்பாளர் விமல் அண்ணாவுடன் கலந்துரையாடிய ஒரு தலைப்பு.
அதன் ஒலிபரப்பு இன்று (10.06-2011) இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு ஒலிபரப்பாகும்.
இந்தப் பதிவில் நான் தெரிவித்த சில விடயங்களை மாத்திரம் சொல்லியிருக்கிறேன். லோஷன் அண்ணாவினுடையதும், விமல் அண்ணாவினதும் கருத்துக்கள் வேறானவை. அத்தோடு சனத்தின் தெரிவு பற்றிய ஒரு exclusive செய்தி விமல் அண்ணாவிடம் உண்டு. ;-)
வானொலியின் இணையச் சுட்டி: www.vettri.lk
வானொலியின் பேஸ்புக் பக்கம்: www.facebook.com/VettriFMOfficial
ட்விற்றர் சுட்டி: www.twitter.com/vettrifm

