முதல்நிலை ரெஸ்ற் அணியாக இங்கிலாந்திற்குச் சென்ற இந்திய அணி 2-0 அல்லது 3-1 அல்லது 3-0 அல்லது 4-0 என்ற கணக்கில் இத்தொடரைத் தோல்வியுற்றால் மாத்திரமே முதல்நிலையைத் தவறவிடும் என்ற நிலையில், இந்திய அணியின் முதலிடத்திற்கு பெரிதளவில் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படாது என்றே எண்ணப்பட்டது.
இங்கிலாந்தின் ஆடுகள நிலைமைகள், அதாவது இங்கிலாந்தில் காணப்படும் ஸ்விங் தன்மை இந்தியா போன்ற உபகண்ட நாடொன்றிற்கு வில்லனாக அமையும் என்ற பொதுவான கருத்து நிலவியிருந்தாலும், இந்திய அணி அண்மைக்காலத்தில் இங்கிலாந்தில் ஓரளவு பரவாயில்லாமல் செயற்பட்டிருந்தது.
இத்தொடருக்கு முன்னர் இடம்பெற்றிருந்த 15 தொடர்களில் 11 தொடர்களில் இங்கிலாந்து வெற்றிபெற்று, ஒரு தொடரைச் சமப்படுத்தியிருந்தாலும், 2000ம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெற்றிருந்த 2 தொடர்களில் ஒன்றில் சமநிலை முடிவையும், ஒரு தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு மனரீதியான பலத்தை வழங்கியிருக்கும்.
குறிப்பாக 2007ம் ஆண்டுத் தொடரில் தொடர் வெற்றியைப் பெற்றுக்கொண்டமை இங்கிலாந்தில் வெற்றிகளைப் பெறமுடியாது என்றில்லை என்பதைப் புலப்படுத்தியது.
எனினும், 2007ம் ஆண்டில் 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்று, முதலாவது போட்டியில் தோற்கும் நிலையிலிருந்து பின்வரிசை வீரர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அத்தோல்வியிலிருந்து மீட்டது வரை இந்திய அணிக்கு நிச்சயமாக சாதகமான காரணங்களாகக் கருதப்பட்டன.
எனினும், 2007ம் ஆண்டில் இருந்த இங்கிலாந்து அணிக்கும் இப்போதுள்ள இங்கிலாந்து அணிக்குமிடையில் பாரிய வித்தியாசம் இருப்பது மறுக்க முடியாதது.
2007ம் ஆண்டில் அவுஸ்ரேலியாவிடம் 5-0 என்ற கணக்கில் ஆஷஷ் தோல்வியைப் பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்ரேலியாவுக்குச் சென்று 3-1 என்ற கணக்கில் ஆஷஷ் தொடரை வென்று வந்த அணிக்குமிடையிலும் நிச்சயமாக பெரியளவிலான மாற்றங்கள் உள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த இங்கிலாந்து அணி மீது எனக்கு தனிப்பட்ட கடுப்பு இருந்தாலும் (அவுஸ்ரேலியாவை ஆஷஷில் தோற்கடித்த கடுப்பு), எப்போதுமே இந்த இங்கிலாந்து அணியின் இரசிகனாக இருந்திருக்கிறேன்.
2009ம் ஆண்டில் அன்டி பிளவர் இங்கிலாந்தின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக/அணிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுலாவில் முதல் ரெஸ்ற் போட்டியில் இங்கிலாந்து 51 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இனிங்ஸ் ஆல் தோல்வியடைந்த பின்னர் அதைப் பாடமாக எடுத்துக்கொண்டு இந்த இங்கிலாந்து அணி கடந்து வந்திருக்கும் பாதை அனைவருக்கும் பாடமானது.
குறிப்பாக "இடைக்காலப் பயிற்றுவிப்பாளர்கள்" அதிகரித்திருக்கும் இச்சூழ்நிலையில், ஒரு இடைக்காலப் பயிற்றுவிப்பாளரின் முதற் போட்டியிலேயே அவ்வணி மோசமான, ஏற்க முடியாத தோல்வியைப் பெற்றுக்கொண்டு, ஒரு பலமற்ற அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 0-1 என்ற கணக்கில் தோற்று வர அந்தப் பயிற்றுவிப்பாளர் மீது இங்கிலாந்துக் கிறிக்கற் சபை வைத்த நம்பிக்கை முக்கியமானது. இந்த நிலையில், இந்திய அணியின் இந்த மோசமான தோல்விகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுபவவை பற்றியும், அவற்றில் காணப்படுகிற உண்மைகள், பிழையான தன்மைகள் பற்றியும் இப்பதிவு ஆராய முற்படுகிறது.
1. காரணம்: இந்திய வீரர்களின் technique போதியளவு இல்லை. நுட்ப ரீதியாக இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் சரியானவர்கள் கிடையாது.
காணப்படும் உண்மை: முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் இக்கருத்தில் ஓரளவு உண்மை உண்டு. இங்கிலாந்து போன்ற ஸ்விங் அதிகமாகக் காணப்படும் இடத்தில் நீங்கள் சிறந்த நுட்பத்தைக் கொண்டிருந்தாலே உங்களால் சிறப்பாக ஆடலாம். இந்தியாவில் நுட்ப ரீதியாக மிகச்சிறந்தவர்கள் என்று சொல்லுமளவிற்கு ராகுல் ட்ராவிட் மற்றும் சச்சின் ரென்டுல்கரே உண்டு. short பந்துகளுக்கு சில தருணங்களில் தனது இயலாமையை வெளிப்படுத்தினாலும், கௌதம் கம்பீரையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களைத் தவிர, வி.வி.எஸ் லக்ஸ்மன், டோணி, ரெய்னா போன்றவர்கள் ஸ்விங் பந்துகளுக்கு பலவீனமானவர்கள் என்ற கருத்துக் காணப்படுகிறது. விரேந்தர் செவாக் மீதும் இந்தக் கருத்துக் காணப்பட்டாலும், அவரது தனிப்பட்ட துடுப்பாட்டமுறையில் அவர் இவற்றைப் பற்றிக் கவனமெடுப்பதில்லை என்று பொதுவாகச் சொல்வார்கள்.
எனினும் ஆசியக் கண்டத்திற்கு வெளியே விரேந்தர் செவாக்கின் கடைசி 15 இனிங்ஸ்கள் ஏதோ ஒன்றை மறைமுகமாகச் சொல்கின்றன.
கடைசி 15 இனிங்ஸ்களில் செவாக்: 24, 34, 22, 48, 12, 0, 63, 25, 32, 13, 11, 0, 0, 8, 33.
சராசரி: 21.66.
எதிர்க்கருத்து: சரியான நுட்பமுறைகள் கொண்ட வீரர்கள் தான் இங்கிலாந்தில் சிறப்பாகச் செயற்பட முடியும் என்றில்லை. கடந்த முறை பங்களாதேஷ் இங்கிலாந்திற்கு விஜயம் செய்தபோது பங்களாதேஷின் தமிம் இக்பாலின் அதிரடிகள் அதை நிரூபித்திருந்தன. தவிர, இத்தொடருக்கு முன்னர் வி.வி.எஸ் லக்ஸ்மன் இங்கிலாந்தில் 7 போட்டிகளில் விளையாடி 44.88 என்ற சராசரியைக் கொண்டிருந்தார்.
அண்மைக்கால வீரர்களில் ஷிவ்நரின் சந்தர்போல், க்றேம் ஸ்மித், கங்குலி போன்ற வீரர்கள் இங்கிலாந்து மண்ணில் மிகச்சிறப்பாகச் செயற்பட்டு தங்களை நிரூபித்திருந்தார்கள்.
ஆகவே நுட்பரீதியிலான பிரச்சினைகள் முக்கியமான காரணியாக மாறியதாக ஏற்றுக்கொள்ள முடியுமா தெரியவில்லை.
2. காரணம்: இந்திய அணி போதியளவு தயார்ப்படுத்தல்களோடு செல்லவில்லை. போதியளவு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை.
காணப்படும் உண்மை: இந்திய அணி ஒரே ஒரு பயிற்சிப்போட்டியில் மாத்திரமே விளையாடியிருந்தது. குறித்த போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தின் களநிலைமைகள் தொடர்பான அறிவு அவர்களுக்கு போதியளவுக்குக் கிடைக்க வாய்ப்புக் குறைவாக இருந்தது. அத்தோடு சச்சின் ரென்டுல்கர் உட்பட சில வீரர்கள் போதியளவு போட்டிப் பயிற்சிகளைக் (match practice) கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மையானது.
எதிர்க்கருத்து: தயார்ப்படுத்தல் போதாது என்ற கருத்து ஏற்கப்படக்கூடியது என்ற போதிலும், சச்சின் ரென்டுல்கர் போன்ற நட்சத்திரங்கள் கூட சறுக்கியிருந்தமை கேள்விகளை எழுப்பியிருந்தது.
3. வீரர்கள் களைப்படைந்திருந்தனர்.
காணப்படும் உண்மை: மகேந்திரசிங் டோணி, சுரேஷ் ரெய்னா உட்பட சில வீரர்கள் தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்குபற்றி வந்திருக்கிறார்கள். உலகக்கிண்ணம், ஐ.பி.எல், அதன்பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுலா எனத் தொடர்ச்சியான போட்டிகளில் பங்குபற்றிவந்த நிலையில், குறித்த வீரர்கள் உடல்ரீதியாக மாத்திரமன்றி, மனரீதியாகவும் களைப்படைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
எதிர்க்கருத்து: ஆனால் ஐ.பி.எல் போட்டிகளுக்குப் பின்னர் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுலாவில் விரேந்தர் செவாக், கௌதம் கம்பீர், சச்சின் ரென்டுல்கர், ஷகீர் கான், ஶ்ரீசாந்த் ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை. அதன்காரணமாக களைப்படைதல் என்ற பேச்சு எந்தளவுக்கு எடுபடக்கூடியது என்பது கேள்விக்குரியது. வி.வி.எஸ்.லக்ஸ்மன் மற்றும் ராகுல் ட்ராவிட் ஆகியோர் ரெஸ்ற் போட்டிகளில் மாத்திரம் பங்கேற்கும் நிலையில், இவர்களும் களைப்படைதல் என்ற நிலைக்குள் உள்ளடக்கப்படக்கூடியவர்கள் அல்லர். அத்தோடு இசாந்த் சர்மாவும் உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை.
4. காயங்கள் காரணமாக முக்கிய வீரர்களை இழந்தமை:
காணப்படும் உண்மை: ஷகீர் கான், விரேந்தர் செவாக் போன்றோரை இழந்திருந்தமை, கௌதம் கம்பீர் போட்டிகளில் ஏற்பட்ட காயம் காரணமாக தடுமாறியமை, பிரவீன் குமார் நான்காவது போட்டியில் காயம் காரணமாக பங்கேற்றிருக்காமை
எதிர்க்கருத்து: ஷகீர் கானின் இழப்பு முக்கியமானது என்ற போதிலும், மேற்கிந்தியத் தீவுகளில் ஷகீர் கானின்றி இந்திய அணி ஓரளவு சிறப்பாகவே பந்து வீசியிருந்தது. தவிர, விரேந்தர் செவாக்கின் ஆசியாவுக்கு வெளியேயான அண்மைக்கால துடுப்பாட்டத்தைப் பார்க்கும்போது அவரின் இழப்பு நிரப்பமுடியாத இழப்பா என்பது கேள்விக்குரியது.
பிரவீன் குமார் முதல் 3 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆகவே அவரது காயம் காரணமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல.
கௌதம் கம்பீர் காயம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், தன்னாலியன்றளவு அணிக்காக அர்ப்பணித்திருந்தார். ஆனால் கௌதம் கம்பீரின் உபாதைகள் இந்திய அணிக்குப் பாதிப்பாக அமைந்திருந்தமை உண்மையானது.
5. இந்திய அணித் தெரிவுக் குழப்பங்கள்:
காணப்படும் உண்மை: அணித்தெரிவில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது சிலரின் கருத்தாகும். குறிப்பாக சுரேஷ் ரெய்னாவின் தொடர்ச்சியான மோசமான பெறுபேறுகளுக்குப் பின்னரும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை, நான்காவது போட்டியில் மியாமியில் தனது விடுமுறையைக் கழி/ளித்திருக் கொண்டிருந்த ஆர்.பி.சிங்கை அழைத்து அவருக்கு வாய்ப்பை வழங்கியமை,
அண்மைக்காலமாக பந்துவீச்சில் சறுக்கிவரும் ஹர்பஜன் சிங் இற்கு இறுதிவரை வாய்ப்பு வழங்கப்பட்டமை ஆகியவை முக்கியமானவை.
இதில் ஆர்.பி.சிங்கின் தெரிவு மிகவும் மோசமான ஒன்று. அதற்கு விளக்கங்களோ அல்லது காரணங்களோ தெரிவிக்கப்பட முடியாதது.
ஹர்பஜன் சிங் இற் 400 ரெஸ்ற் விக்கெட்டுகள் அவரை அணியில் வைத்திருக்கின்றன. அஸ்வின் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டிய காலம் வந்தாயிற்று. அத்தோடு காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாகத செவாக், ஷகீர்கான் போன்றோரே அவசரப்படுத்தி அணியில் சேர்த்தமையும் குழப்பமாகவே அமைந்திருந்தது.
எதிர்க்கருத்து: ஒருவகையில் சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டிய கட்டாயம் உண்டு. குறிப்பாக தனது கிறிக்கற் வாழ்வில் தான் விளையாடிய "துடுப்பெடுத்தாட கஷ்டமான ஆடுகளங்கள்" என ராகுல் ட்ராவிட் குறிப்பிட்ட மேற்கிந்தியத் தீவுகள் ஆடுகளங்களில் சுரேஷ் ரெய்னா மிகச்சிறப்பாகச் செயற்பட்டிருந்தார். ஆகவே அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது. ஏனைய வீரர்களும் தடுமாறிய நிலையில் சுரேஷ் ரெய்னா மாத்திரம் பலியாடாக மாற்றப்பட முடியாது.
ஹர்பஜன் சிங் இற்குப் பதிலாக அஷ்வின் அல்லது ஒஜாவை முயற்சித்திருக்கலாம் என்ற போதிலும், மிகப்பெரிய தொடரொன்றில் அவர்களுக்கு அது அதிக அழுத்தங்களை வழங்கியிருக்கும் என்றாலும் "மக்டவல்ஸ்" விளம்பரமொன்றில் டோணி சொல்வது போல வெற்றிகரமான அணித்தலைவராக இருக்க வேண்டுமானால் சில முடிவுகளை எடுத்துத்தான் ஆகவேண்டும்.
(அந்த விளம்பரத்திலும் ஹர்பஜனுக்குப் பதிலாக அனுபவம் குறைந்த ஒரு பந்துவீச்சாளர் முக்கியமான தருணத்துக்கு தெரிவுசெய்யப்பட்டமை பற்றியே பேசப்படுகிறது)
6. சச்சினின் 100 ஆவது சதம் பற்றிய அதிக கவனம் செலுத்தல் அணியைப் பாதித்தது:
காணப்படும் உண்மை: இத்தொடருக்கு இந்திய அணி செல்லும் போதே சச்சின் ரென்டுல்கரின் 100 ஆவது சதம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆகவே குறித்த எதிர்பார்ப்புகளும், ஊடக அழுத்தங்களும் ஒட்டுமொத்த இந்திய அணியைப் பாதித்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.
உதாரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் சச்சினின் 50 ஆவது ரெஸ்ற் சதம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்பட்ட தருணத்தில் இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு எதிராக முதலாவது ரெஸ்ற் போட்டியில் களமிறங்கியது. குறித்த போட்டியில் இந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
எனினும் குறித்த போட்டியின் இரண்டாம் இனிங்ஸ் இல் சச்சின் ரென்டுல்கர் தனது 50 ஆவது ரெஸ்ற் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார். அதன்பின்னர் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே கவனக்கலைப்பு என்பது காரணமாகக் குறிப்பிடக்கூடியது தான்.
எதிர்க்கருத்து: ஆனால் சர்வதேச வீரர்கள், அனுபவம் மிக்க சாதனையாளர்கள் என்ற ரீதியில் குறித்த அழுத்தங்கள் ஏதாவது காணப்படின் அவற்றைக் களைந்து ஆடுவதற்கு இந்திய நட்சத்திரங்களால் முடியாமல் போனது என்பது எந்தளவுக்கு சரியானது எனத் தெரியவில்லை.