Tuesday, November 1, 2011

பாகிஸ்தான் - சபிக்கப்பட்ட தேசமா?



முதலில், இது ஒரு கிறிக்கற் பதிவு. சீரியஸான பதிவேதும் கிடையாது.
ஸ்பொட் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகளுக்காக பாகிஸ்தானின் இரண்டு வீரர்களுக்கெதிராக இடம்பெற்றுவந்த குற்றவியல் விசாரணகளின் முக்கிய பகுதியாக இன்று அவற்றிற்குரிய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஏமாற்றுவதற்காக சதி செய்தமை, முறையற்ற விதத்தில் பணத்தைப் பெற்றுக்கொண்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இடம்பெற்றுவந்த விசாரணையில் சல்மான் பட் இற்கு இரண்டு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், மொகமட் ஆசிஃப் ஏமாற்றுவதற்காக சதி செய்தார் என்ற குற்றஞ்சாட்டில் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக 12 பேர் அடங்கி நீதிபதிகள் குழு ஒருமித்த முடிவுக்கு வரமுடியாமை காரணமாக அது தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.


ஏற்கனவே குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்மானித்து சல்மான் பட், மொகமட் ஆசிஃப் மற்றும் மொகமட் ஆமிர் மூவருக்கும் சர்வதேச கிறிக்கற் சபை கிறிக்கற்றில் பங்குபற்றுவதற்காக தடையுத்தரவை வழங்கியிருந்தது.


இந்நிலையில், இவ்விசாரணைகள் எவ்வளவிற்கு முக்கியமானவை என்ற கேள்வி எழலாம்.
ஆனால், சர்வதேச கிறிக்கற் சபை நடத்திய விசாரணைகளின் பின்னர் போட்டித்தடைகள் மாத்திரமே வழங்கப்படலாம், ஆனால் இப்போது இடம்பெற்றுவரும் விசாரணைகள் குற்றவியல் விசாரணைகள் என்பதால் இவர்கள் இருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படவும் வாய்ப்புக்கள் உண்டு. சல்மான் பட் இற்கு அதிகபட்சமாக 7 வருட சிறைத்தண்டனையும், மொகமட் ஆசிஃப் இற்கு அதிகபட்சமாக 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட தற்போதைய நிலையில் வாய்ப்புக்கள் உண்டு.

என்னைப் பொறுத்தவரை இன்றைய நாள் மிக முக்கியமானது.
இரண்டு குற்றவாளிகள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்புப் பெற்றிருக்கிறார்கள். இவ்விசாரணைகளில் மொகமட் ஆமிர் மற்றும் மஷார் மஜீத் ஆகியோருக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை என்னால் இக்கணம் வரை கண்டுபிடிக்க முடியவில்லை. நிறைய நாட்களாக அவர்களிருவரும் ஏன் அழைக்கப்படவில்லை என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்துத் தோல்வி தான்.


நீங்கள் கிறிக்கற் வீரர்களாக இருக்கலாம், சினிமா நட்சத்திரங்களாக இருக்கலாம், பிரபலங்களாக இருக்கலாம், ஆனால் சட்டத்தின் முன்னால் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும், தண்டனைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆவல்.

தற்போது இவர்கள் இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து, தலையிடிக்கு மருந்தைக் வழங்கியுள்ளது இலண்டனிலுள்ள நீதிமன்றம். உடனடிப் பிரச்சினை தீர்ந்திருக்கிறது, இனிமேல் தலையிடி வராது என நம்பிக்கொள்ள ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

வழங்கப்படவுள்ள தண்டனைகள் இனிவரும் காலங்களில் எந்தவொரு வீரரும் பிழையான நடத்தைகளில், சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் நடந்துகொள்ள முடியாத அளவுக்கு அமைய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு, அத்தோடு ஏனைய வீரர்களுக்கு ஓர் எச்சரிக்கையையும், பயத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

ஆனால் ஏற்கனவே சொன்னபடி, தலையிடிக்கான மருந்து மாத்திரம் போதுமானதா என்பது தான் என் கேள்வி.
தலையிடி எதனால் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியதும், அதை எவ்வாறு குணப்படுத்துவது என்பதுவும் தொக்கி நிற்கின்ற வினாக்கள்.
எதற்காக இந்த ஸ்பொட் ஃபிக்சிங், எதற்காக இந்த முறைகேடுகள், எவ்வாறு இவற்றைத் தடுப்பது என்பது குறித்து தீர்க்கமான நடவடிக்கைகளில் கிறிக்கற் சபைகள் ஈடுபடவேண்டிய காலகட்டம் இதுவென்பதை இவ்விசாரணைகள் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றன.

மொகமட்; ஆமிர், மொகமட் ஆசிஃப் என்ற இரண்டு மாபெரும் திறமைசாலிகள் இன்று தங்களது திறமைகளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை மொகமட் ஆமிர் மற்றும் மொகமட் ஆசிஃப் இருவரும் மாபெரும் ஜாம்பவான்களாக உருவாகக்கூடிய திறமைகளை, வாய்ப்புக்களைக் கொண்டிருந்தவர்கள். கண்டியில் வைத்து இலங்கை அணியை உருட்டி எடுத்தபோது யாரோ ஆசி;ஃப் என்று புதுப்பெடியன் என்று திரும்பிப் பார்க்கவைத்த ஆசிஃப் ஆக இருக்கலாம், தனது முதலாவது ரெஸ்ற் போட்டியின் முதலாவது ஓவரில் விக்கெட்டைக் கைப்பற்றி சர்வதேசக் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த ஆமிர் ஆகட்டும், இன்று கிறிக்கற்றில் இல்லை.

மொகமட் ஆமிர் சில வருடங்களின் பின் மீண்டும் கிறிக்கற் போட்டிகளில் பங்குபற்றலாம், ஆனால் முன்பளவு அவரால் பிரகாசிக்க முடியுமா என்பது கேள்விக்குரியது. ஆசிஃப் இன் எதிர்காலம் கிட்டடத்தட்ட நிறைவடைந்துவிட்டது.

இவர்கள் ஏன் இவ்வழியைத் தேர்வு செய்தார்கள் என்பதை ஆராய வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கும், சர்வதேச கிறிக்கற் சபைக்கும் உண்டு.
தாய், தந்தையர், குடும்பச்சூழல் சிறப்பாக அமையாத, குழப்பங்களைக் கொண்ட சந்தர்ப்பங்களில் அக்குடும்பங்களில் வாழும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்வது குறைவானது. அதுவே பொதுவான பிரச்சினையாக அமைந்திருந்தது பாகிஸ்தானில்.

பாகிஸ்தான் கிறிக்கற் சபை உலகின் மோசமான கிறிக்கற் சபையாக, ஊழல் மிக்கதொன்றாக விளங்கியது, முன்னாள் வீரர்கள் நேர்மைக்குப் பெயர் போனவர்களும் கிடையாது, கிறிக்கற் சபையிடம் பணமேதும் இல்லாத நிலையில் வீரர்கள் போதிய ஊதியத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் இல்லை. ஐ.பி.எல் பணம் இல்லை...


இப்படி ஏராளமான விடயங்கள் இவ்வீரர்களை தவறு செய்யத் தூண்டியிருக்கலாம். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தவறு செய்யத் தொடங்கினால் வாழ்க்கை முழவதும் தவறு மாத்திரமே செய்துகொண்டிருக்க எங்களால் முடியும்.
இம்மூன்று வீரர்களும் ஒழுங்கா வீரர்களாக இருந்திருந்தால், இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய பிராந்திய அணிகளில் விளையாடி தேவையான பணத்தைப் பெற்றிருக்கலாம், இதோ இவ்வாண்டு ஆரம்பிக்கவுள்ள பிக்பாஷ் தொடரில் சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கலாம், ஆனால் இப்போது எதுவுமேயில்லாமல் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்கள் இவர்கள்.
தந்தைக்கு தீர்ப்பு வழங்க சிறிறு நேரத்திற்கு முன்னர் பிறந்த குழந்தை என்ன பாவம் செய்தது, சல்மான் பட்டை சிறைக்கு அனுப்பிய குழந்தை என்று பெயர் வாங்க அக்குழந்தை என்ன பாவம் செய்தது?

கிறிக்கற் என்பதையும் தாண்டி, வாழ்க்கை பற்றிய, வாழ்தல் பற்றிய ஏராளமான கேள்விகளை இவ்வழக்கு எழுப்பி நிற்கிறது என்பது மாத்திரம் யதார்த்தம்.

ஆனால் ஒரு விடயம், ஸ்பொட் ஃபிக்சிங் பாகிஸ்தானில் மாத்திரம் இடம்பெறுகிறது, இம்மூன்று வீரர்களும் மாத்திரம் தான் அதில் ஈடுபடுகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்க நான் முட்டாளில்லை. காலம் பதில் சொல்லுமென்று காத்திருக்க முடியாது தான், ஆனால் பல நேரங்களில் காத்திருப்பு மாத்திரமே வாழ்க்கையாகிவிடுகிறது.